சிட்னியின் LGBTQIA+ இரவு நேரக் கேளிக்கை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாரயிறுதி போதைப்பொருள் சோதனைகள் குறித்து, காவல்துறை கண்காணிப்பு அமைப்பிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக NSW நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கை போன்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சனிக்கிழமை இரவு, ஆக்ஸ்போர்டு வீதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றுக்குள் 12-க்கும் மேற்பட்ட காவலர்களும், போதைப்பொருள் கண்டறியும் மோப்ப நாயும் நுழைவதை, அங்கிருந்த ஜேம்ஸ் ட்விக் என்பவர் எடுத்த காணொளி காட்டுகிறது.
காவல்துறையினர் விடுதி முழுவதையும் சோதனை செய்ததால், அசௌகரியம் அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் அங்கிருந்து வெளியேறியதாக ஜேம்ஸ் ட்விக் தெரிவித்தார்.
"நான் அந்த இரவு விடுதியின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தபோது, சுமார் 20 காவலர்கள் போதைப்பொருள் மோப்ப நாயுடன் உள்ளே நுழைந்தனர். அது எங்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது" என்று அவர் கூறினார்.
மேலும், "இதன் காரணமாக அந்த விருந்தோம்பல் நிறுவனத்திற்கு எவ்வளவு பெரிய பண இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் ஊகித்துப் பார்க்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சோதனை தொடர்பாக NSW காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில்,
"உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள பல விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது 65 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 28 இடங்களில் போதைப்பொருள் கண்டறியப்பட்டு, 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; 6 பேருக்கு கஞ்சா தொடர்பான எச்சரிக்கைகளும், ஒருவருக்கு அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும்,தன்பாலின ஈர்ப்பாளர்களை குறிவைத்துத் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை NSW காவல்துறையின் துணை ஆணையர் பீட்டர் மெக்கென்னா மறுத்துள்ளார். வாரயிறுதியில் 14 வெவ்வேறான உரிமம் பெற்ற விடுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"அவற்றில் ஐந்து அல்லது ஆறு விடுதிகள் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ சமூகத்தினர் அதிகம் கூடும் இடங்களாக இருக்கலாம். அதே இரவில், கிங்ஸ் க்ராஸ் பகுதியிலும் உள்ள உரிமம் பெற்ற விடுதிகளிலும் மோப்ப நாய் சோதனையை மேற்கொண்டோம்" என்று துணை ஆணையர் மெக்கென்னா '702 ஏ.பி.சி சிட்னி மார்னிங்ஸ்' நிகழ்ச்சியில் கூறினார்.
"நாம் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டியது அவசியம். இல்லையெனில், அது போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும்" என்றும் அவர் விளக்கமளித்தார்.
சனிக்கிழமை சோதனையின் போது காவல்துறையினரின் சீருடை கேமராக்களில் பதிவான காட்சிகளைத் தாம் நேரில் ஆய்வு செய்ததாகவும், அதிகாரிகள் "மரியாதையுடனும், தொழில்முறை சார்ந்தும், இடையூறு ஏற்படுத்தாத வகையிலும்" நடந்துகொண்டதாக துணை ஆணையர் மெக்கென்னா கூறினார்.
ஜூன் 13 சோதனைகள் குறித்து NSW காவல்துறை நடத்திய விசாரணையில், எவ்வித வன்முறையோ அல்லது சட்டவிரோத நடத்தையோ இடம்பெறவில்லை எனத் துணை ஆணையர் மெக்கென்னா தெரிவித்தார்.
இருப்பினும், காவல்துறை கண்காணிப்பு அமைப்புத் தனது சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்குமாறு NSW காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.