ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த இதமான வசந்த கால வெயில் நிறைவுக்கு வந்து, இந்த வாரத்தில் மீண்டும் கடுமையான குளிர்கால வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் கிழக்குக் கடற்கரைப் பகுதி வழியே தீவிரமடையும் குளிர்ந்த காற்று வீச்சு (cold front) காரணமாகவே இந்த திடீர் வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் (NSW) ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தைப் பொறுத்தவரை, மெல்போர்ன் மற்றும் ஜீலாங் (Geelong) ஆகிய நகரங்களில் ஆங்காங்கே மழையும் சிறிய அளவிலான ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும்.
இருப்பினும், அன்றைய தினத்தின் இறுதியில் வானம் தெளிவாகும் எனக் கணி்க்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றாலும், பலத்த காற்று காரணமாக வழக்கத்தை விடக் கூடுதல் குளுமையாக உணர்கப்படும்.
டாஸ்மேனியா மற்றும் விக்டோரியாவில் தொடங்கும் இந்த குளிர்ந்த காற்று வீச்சு, பின்னர் நியூ சவுத் வேல்ஸின் கிழக்குக் கரை நோக்கி நகரவுள்ளது. இதனால் சிட்னி நகரத்தின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸிலிருந்து 15 டிகிரி செல்சியஸாகக் குறையும். அதேபோல் நியூகேஸில் (Newcastle) நகரில் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸிலிருந்து 13 டிகிரி செல்சியஸாக அதிரடியாகச் சரியக்கூடும்.
இந்தக் குளிர்ந்த காற்று வீச்சு நியூ சவுத் வேல்ஸின் மத்திய-வடக்குக் கடற்கரைப் பகுதியை அடையும் போது, பிற்பகல் வெப்பத்துடன் இணைந்து இடி மின்னலுடன் கூடிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், நியூ சவுத் வேல்ஸின் உள்ளூர் பிராந்தியங்கள் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த திடீர்க் குளிர் அலையிலிருந்து தப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், நாட்டின் மேற்குப் பகுதியில் வெப்பமண்டல வடக்குப் பகுதியிலிருந்து வீசும் காற்று காரணமாக மழையும் இடி மின்னலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளைப் பாதிக்கும்.
தென்கிழக்கு மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களிலும் வாரத்தின் தொடக்கத்தில் குளிர் நிலவினாலும், வார இறுதியை நோக்கி வெப்பநிலை மீண்டும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதிக்கான நீண்டகால வானிலை கணிப்பில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு வழக்கத்தை விடக் குறைவாகவும், மேற்கு அரைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.