கடந்த வாரம் சிட்னி inner-west பகுதியில் பேருந்தில், இஸ்லாமிய இளம் பெண் ஒருவரை இனவாத மற்றும் இஸ்லாமோபோபியா (இஸ்லாமிய வெறுப்பு) கருத்துகளால் வசைபாடிய குற்றச்சாட்டின்கீழ், நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10 அன்று, 13 வயதான அந்த இஸ்லாமியச் சிறுமி பள்ளி சீருடை மற்றும் ஹிஜாப் அணிந்து, Strathfield ரயில் நிலையத்திலிருந்து கிரீனேக்கர் (Greenacre) பகுதிக்கு பேருந்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே, இந்த நபரால் தொடர்ச்சியாக வசைபாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவிய இச்சம்பவம் தொடர்பான காணொளியில், அந்த நபர் சிறுமியை "பயங்கரவாதி", "குடியேறிய நாய்" மற்றும் "குடியேறிய கலப்பின நாய்" என்று அழைப்பதும், அவர் "இங்கு வாழத் தகுதியற்றவர்" என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.
கிரீனேக்கரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 50 வயதான அந்த நபரைச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் கைது செய்து, பேங்க்ஸ்டவுன் (Bankstown) காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உடல் ரீதியான தீங்கை விளைவிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் பின்தொடர்தல்/மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அவரது பிணை மறுக்கப்பட்டு, புதன்கிழமை அன்று பேங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தான் 13 வயதுச் சிறுமி என்பதை அச்சிறுமி மீண்டும் மீண்டும் கூறுவது அக்காணொளியில் கேட்கிறது. சிறுமி ஹிஜாப் அணிந்திருந்ததாலேயே அவர் குறிவைக்கப்பட்டதாக அவரது தாயார் நம்புகிறார்.