நேஷனல் பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமையன்று (17) உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) உரையாற்றவுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி (Labor) தனது நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட புலம்பெயர்வு கொள்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கொள்கை ஆகஸ்ட் மாதமே நேஷனல் பிரஸ் கிளப்பில் டோனி பர்க்கால் வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், சிறந்த அணுகுமுறை குறித்து அமைச்சரவையின் ஒப்புதலை அரசு பெறத் தவறியதை அடுத்து, கடைசி நிமிடத்தில் அந்த உரை ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு, தொழிலாளர் கட்சி தனது திட்டங்களை இன்னும் இறுதி செய்து வருவதாகவே பராமரித்து வந்தது.
புலம்பெயர்வு ஒரு முக்கிய அரசியல் களமாக உருவெடுத்துள்ள நிலையிலும், தொழிலாளர் கட்சி தனது உத்தியை வெளியிட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
புலம்பெயர்வு அறிவிப்புகளுக்கு காலக்கெடு எதையும் நிர்ணயிக்க மறுத்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "பொருத்தமான நேரத்தில்" அவை வெளியிடப்படும் என்று கூறி, கூடுதல் விவரங்களை வழங்குவதை மீண்டும் மீண்டும் தவிர்த்து வந்தார்.
தொழிலாளர் கட்சி ஏற்கனவே நிகர வெளிநாட்டு புலம்பெயர்வை (net overseas migration) குறைக்கவும், 2027-28 நிதியாண்டிற்குள் ஆண்டுக்கு 225,000 பேராகக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கவும் திட்டமிட்டிருந்தது.
நிகர வெளிநாட்டு புலம்பெயர்வைக் கட்டுப்படுத்த விசா அமைப்பில் மேலும் மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பர்க் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
அதன்படி, வேலை விடுமுறை விசா (working holiday visa) விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் வேகத்தைக் குறைப்பதாக ஆகஸ்ட் மாதத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
கோடை காலத்தில் பிராந்திய வணிகங்களுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தை எழுப்பி, தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறையினர் தெளிவான முடிவை வலியுறுத்தி வருகின்றனர்.
சர்வதேச மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விதிகளைக் கடுமையானதாக்கவும், சில வருகையாளர் விசாக்களை (visitor visas) மேலும் கட்டுப்படுத்தவும் தொழிலாளர் கட்சி திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தியமான மாற்றங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்கள் தங்குமிழை நீட்டிக்க படிப்புகளை மாற்றுவது தடுக்கப்படலாம்; உள்நாட்டிலேயே சமர்ப்பிக்கப்படும் விசா விண்ணப்பங்களின் பரிசீலனை தீவிரமாக்கப்படலாம்; மாணவர் விசாவுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்; மேலும் உயர் கல்வியிலிருந்து தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு மாறுவது கட்டுப்படுத்தப்படலாம்.
சில சுற்றுலா விசாக்கள் 12 மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாகக் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆண்டு மனிதநேய சேர்க்கையான 20,000 இடங்கள் குறைக்கப்படாது என்பதை அல்பானீஸ் அரசு ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
புலம்பெயர்வுத் திட்டங்களை வீட்டுவசதி விநியோகத்துடன் இணைத்தே பரிசீலிக்க வேண்டும் என்று பர்க் முன்பு சுட்டிக்காட்டியிருந்தார். ஜூன் மாதத்தில் பேசிய அவர், "புலம்பெயர்வை தவறான வழியில் கையாண்டால், அது வீட்டுவசதி நிலையை மேலும் மோசமாக்கும்," என்று கூறியிருந்தார்.
அரசியல் அழுத்தம் அதிகரிப்பு
எதிர்க்கட்சியுடன் இருகட்சி உடன்பாட்டிற்கான வழியைக் கண்டுபிடிக்க முயன்றதாக பர்க் SBS நியூஸிடம் தெரிவித்தார்.
"நிகர வெளிநாட்டு புலம்பெயர்வை ஒழுங்குபடுத்துவதற்கு, அன்றைய குடியேற்ற அமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய எதிர்க்கட்சி ஆக்கபூர்வமாக செயல்படும் என்று நான் நம்பியிருந்தேன்," என்று அவர் புதன்கிழமை கூறினார்.
"தற்போது, அவர்கள் ஆதரிப்பதாகக் கூறும் நடவடிக்கைகளுக்குக்கூட ஒப்புக்கொள்ளவில்லை.
"கூடுதல் இலக்கு சார்ந்த அதிகாரங்கள் என் கைவசம் இருப்பதைத்தான் நான் அதிகம் விரும்புவேன்."
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு முறைக்கு ஒரு பெரிய "மறுசீரமைப்பு" தேவை என்று வாதிடும் One Nation கட்சி, மூன்றாண்டுகளில் புலம்பெயர்வை 750,000 க்கும் மேற்பட்ட இடங்களாகக் குறைக்க முன்மொழிந்துள்ளது.
இக்கொள்கையின் கீழ், சர்வதேச மாணவர்கள், சமீபத்தில் பட்டம்பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்; இந்தப் பிரிவுகளின்கீழ் வரும் புலம்பெயர்வு இடங்கள் மூன்றாண்டுகளில் சுமார் 470,000 வரை குறைக்கப்படும்.