ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினராக' (associate member) மாறுவது குறித்து நியூசிலாந்து எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் செய்தி தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு இத்தகைய வாய்ப்பை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
"நியூசிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.
"ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் 'இணை உறுப்பினராக' கனடா இணைவதற்குக் கதவுகளைத் திறக்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
கனடாவுக்கான இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதுடன், இந்த நடவடிக்கையை "கேலிக்கூத்தானது" என்றும் விமர்சித்தார்.
வியாழக்கிழமை பேசிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா, கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தங்களது உறவை வலுப்படுத்தக்கூடும் என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான உறவை ஏற்படுத்த முயலும் கனடாவின் முயற்சிக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவாக இருப்பதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் பாரல் செவ்வாயக்கிழமை தெரிவித்திருந்தார்.