ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong), பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் டாக்டர் வார்சன் அகாபெக்கியனுடன் (Varsen Aghabekian) தொலைபேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன்போ , இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க இரு அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகள் வரும் மாதங்களில் சந்தித்துப் பேச ஒப்புக் கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த உரையாடலின் போது, பாலஸ்தீன அதிகாரசபையின் (Palestinian Authority) சீர்திருத்தக் கடமைகளின் முன்னேற்றம் குறித்து வார்சன் அகாபெக்கியன், பென்னி வோங்கிடம் விளக்கமளித்தார்.
இது குறித்து திங்கள்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பென்னி வோங், "இரண்டு நாடுகள் கொள்கைக்கான (Two-state solution) தீறவில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது. பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் டாக்டர் வார்சன் அகாபெக்கியனுடன், பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்த திட்டங்கள் மற்றும் பாலஸ்தீனத்தின் நிறுவன அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கான நமது கூட்டு முயற்சிகள் குறித்துப் பேசினேன்.
காசாவில் நிலவும் பேரழிவு நிலைமை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். பாலஸ்தீன அரசில் ஹமாஸ் அமைப்பு எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்தினேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், குடியேறிகளின் வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
காசா அமைதித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துமாறும், காசாவிற்குத் தடையற்ற நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அனைத்துத் தரப்பினரையும் ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக வார்சன் அகாபெக்கியனிடம் பென்னி வோங் தெரிவித்தார்.