ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
'பிளான் டாஸ்மேன்' (Plan Tasman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது பணியாளர்கள், பயிற்சிகள், திறன் மேம்பாடு, போர்ப்பயிற்சி, பொறியியல், ஒழுங்குமுறைகள் மற்றும் சர்வதேச அளவிலான ஈடுபாடுகள் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இரு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் டேரன் குரோகன் (Darren Grogan) மற்றும் ராயல் நியூசிலாந்து கடற்படையின் துணைத் தலைவர் கமாடோர் காரல் வுட்ஹெட் (Karl Woodhead) ஆகியோர் இந்த 'பிளான் டாஸ்மேன்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிட்ட Darren Grogan, "பிளான் டாஸ்மேன் ஒப்பந்தமானது தலைமுறை தலைமுறையாக எங்களது கடற்படைகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இணைந்து பயிற்சி பெறவும், செயல்படவும், கூட்டுத் திறன்களை மேம்படுத்தவும் இது ஒரு நடைமுறைச் சாத்தியமான கட்டமைப்பை வழங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் உறவு 160 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது என்றும், போர் மற்றும் அமைதி நிலவிய காலங்களில் தலைமுறை தலைமுறையாக இது மேலும் பலமடைந்துள்ளதாகவும் வுட்ஹெட் தெரிவித்தார்.