சிட்னியின் வடமேற்கு பகுதியில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவ தொடர்பாக, 18 வயது இளைஞர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹில்ஸ் மாவட்டத்தின் நார்வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு, திங்கள்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், முகம் மற்றும் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனைக் கண்டறிந்தனர். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த மற்ற ஐந்து பேருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திலேயே சிறுவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறுவனின் தாயாரும் அவனுடன் வைத்தியசாலையில் இருப்பதாகக் காவல் கண்காணிப்பாளர் நவோமி மூர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 11 வயதுச் சிறுவனின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேர்வே டிரைவ் அடுக்குமாடி குடியிருப்பில் என்ன நடந்தது என்பதை உடனடியாகக் கூற முடியாது எனக் குறிப்பிட்ட மூர், இருப்பினும் இந்தச் சம்பவத்திற்குத் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுடன் (Organised crime) தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என்று கூறினார்.
"இது திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்கள் சார்ந்த சம்பவம் என்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. எனினும், இது குறித்து மிகவும் தீவிரமான விசாரணை நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.