மெல்பேர்னில் ISIS பயங்கரவாத அமைப்பின் பிரச்சாரத்தை பரப்புவதில் முக்கிய பங்காற்றியதாக சந்தேகிக்கப்படும் 65 வயது முதியவர் ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை காலை கார்ல்ட்டன் (Carlton) பகுதியில் உள்ள இல்லமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் குறித்த பயங்கரவாத அமைப்பிற்கு விசுவாசப் பிரமாணம் செய்துகொண்டதுடன், இணையம் வழியே பிரச்சாரகராகச் செயல்பட்டு, சுமார் 10,000 வன்முறை தீவிரவாதக் கோப்புகள் மற்றும் ISIS பிரச்சாரப் பொருட்களை அனுப்பியதாகக் காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.
நண்பகலுக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல் துறை (AFP), பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது, வன்முறை தீவிரவாதப் பொருட்களை வைத்திருந்தது மற்றும் கட்டுப்படுத்தியது, மற்றும் தகவல் தொடர்புச் சேவையைப் பயன்படுத்தி குற்றச்செயலில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தது.
உதவி ஆணையர் பவுலா ஹட்சன் (Paula Hudson) கூறுகையில், குறித்த நபர் மெல்பேர்னிலிருந்து விமானம் மூலம் வெளியேறியபோது, அவரிடமிருந்த மின்னணு சாதனங்களில் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து புலனாய்வுத் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"சாதனங்கள் பின்னர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட ஆய்வில், அந்த நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரப் பொருட்களைப் பார்வையிட்டதும், அவற்றைப் பகிர்ந்ததும் தெரியவந்தது" என்று அவர் கூறினார்.
மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் அளவைப் பார்க்கும்போது, அந்த அமைப்பிற்குள் ஐஎஸ்ஐஎஸ் பிரச்சாரத்தை விநியோகித்த முதன்மை நபராக இவர் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.
"அந்தப் பொருட்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களைப் பெருமைப்படுத்தும் வகையிலும், மற்றவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றும் நோக்கில் வெறுப்புணர்வைத் தூண்டும் சித்தாந்தத்தைப் பரப்பும் வகையிலும் அமைந்திருந்தன" என்றும் அவர் கூறினார்.