ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்தித்த போது, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நெகிழ்ச்சியடைந்தார்.
உக்ரைன் ஜனாதிபதியைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்குப் பின்னரான கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளில், செலென்ஸ்கி வெளிப்படுத்திய விதிவிலக்கான தலைமைத்துவத்திற்குத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியாக 60 மில்லியன் டொலர்களை வழங்குவதாகவும் அல்பானீஸ் அறிவித்தார். இதன் மூலம் உக்ரைனுக்கான ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்தப் பங்களிப்புத் தொகை சுமார் 1.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், உக்ரைனின் கடற்படையை மேம்படுத்துவதற்காக பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தலைமையில் முன்னெடுக்கப்படும் திட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இணைந்துகொள்ளும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் 10 ஆண்டுகள் காலப்பகுதிக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.