ஆஸ்திரேலியாவின் பிராட்வாட்டர் (Broadwater) பகுதியில், முக்கோணக் காதல் மோதலால் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் குழந்தையின் ஆடைகள் வைக்கும் பீரோவில் அடைத்து வைக்கப்பட்டதாகப் பெர்த் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம், புஸெல்டன் நகரின் பிராட்வாட்டர் பகுதியில் தாரா மேரி மோரிசன் (Tara Marie Morrison) என்பவரைக் கொலை செய்ததாக ஹன்னா லூயிஸ் குளோவர் (Hannah Louise Glover - 30) மற்றும் ஜேம்ஸ் அந்தோணி சொர்கியோவானி (James Anthony Sorgiovanni - 29) ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் குளோவர், ஜெல் டிரைவ் பகுதியில் சொர்கியோவானியுடன் இணைந்து வாழ்வதற்கு முன்பு, கொல்லப்பட்ட தாரா மேரி மோரிசனுடன் உடலுறவு சார்ந்த தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறையில் காவல்துறை ரகசியமாகக் பொருத்திய ஒலிப்பதிவுக் கருவிகள் மூலம், குளோவர் தனது சக பெண் கைதியிடம் இக்கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டதும், தாக்குதலுக்குப் பல கத்திகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறியதும் தெரியவந்துள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் மைக்கேல் ஸ்வெட்கோஸ்கி கூறுகையில், மோரிசன் கொல்லப்பட்ட அன்று பெல் டிரைவ் இல்லத்திற்குச் சென்று, அத்தம்பதியருடன் இணைந்து 'மெத்தம்பெட்டமைன்' (Methylamphetamine) என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
அப்போது, அந்த வீட்டிலிருந்து பெண் ஒருவர் வலியாலும் வேதனையாலும் அலறும் சத்தம் சுமார் 30 நிமிடங்கள் கேட்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"மோரிசன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைத்து வழிகளிலும் போராடியுள்ளார். ஆனால் அவருக்குத் தப்பிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது," என்று வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இரத்த வெள்ளத்தில் உறைந்த வீடு
இரத்தக் கரைகள் படிந்த சுவர்கள் மற்றும் குளோவரின் 18 மாத பெண் குழந்தையின் அறையிலிருந்த பீரோவுக்குள் மோரிசனின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன.
கொலைக்குப் பிறகு, குளோவரின் 18 மாதக் குழந்தையை அழைத்துக்கொண்டு அத்தம்பதியர் ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டன. வீட்டிற்குத் தீ வைக்கும் நோக்கில் அவர்கள் எரிவாயுவை (Gas) திறந்து விட்டுச் சென்றதாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்
பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த சொர்கியோவானி, குளோவர் தான் மோரிசனைத் தாக்கியதாகவும், தான் அவசர உதவி எண்ணிற்கு (000) அழைக்க முயன்று காப்பாற்றப் போராடியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் குளோவரோ, மோரிசன் குத்தப்பட்டபோது சொர்கியோவானி அவரைப் பிடித்து வைத்திருந்ததாகச் சிறைக் கைதியிடம் கூறியுள்ளார். இந்த மோதலுக்கு 'முக்கோணக் காதலும்' பொறாமையுமே காரணம் என வழக்கறிஞர் தெரிவித்தார்.
குளோவரின் வழக்கறிஞர் அந்தோணி ஏயர்ஸ் கூறுகையில், மோரிசன் கொல்லப்பட்ட போது குளோவர் வீட்டில் இருந்ததை ஒப்புக்கொண்டாலும், சொர்கியோவானி தான் கொலையைச் செய்தார் என்று வாதிட்டார். நடுவர் மன்றத்தினர் நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சொர்கியோவானியின் வழக்கறிஞர் லிசா போஸ்டன் வாதிடுகையில், குளோவர் தான் கொலையாளி என்பதை ஆதாரங்கள் நிரூபிக்கும் என்றார். போதைப்பொருளின் தாக்கத்தால் மயங்கிக் கிடந்த தனது கட்சிக்காரர், எழுந்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டதாகவும், போதையின் மயக்க நிலையால் குளோவரைத் தடுக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.
இவ்வழக்கின் விசாரணை ஆறு வாரங்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.