ஆஸ்திரேலியாவின் Northern Territoryஐச் சேர்ந்த சிறுவன் ஒருவர், சுமார் ஒரு வருட காலமாக இன்ஸ்டாகிராமில் "நாசி ஆதரவு, குடியேற்ற எதிர்ப்பு, திருநங்கைகள் எதிர்ப்பு மற்றும் வெள்ளை தேசியவாத" கருத்துகளைப் பதிவேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, காமன்வெல்த் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அடையாளம் வெளிப்படுத்தப்படாத அச்சிறுவன், அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையில் தகவல்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தியது மற்றும் இணையத்தில் தீவிரவாத அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்த்தது அல்லது வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்த வாரம் சிறுவர் நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், அச்சிறுவன் " ஹிட்லரின் உருவத்தைப் போல மாற்றியமைக்கப்பட்ட டேக்கோமீட்டர் (tachometer)" அடங்கிய காணொளி ஒன்றை பார்த்ததாகக் கூறப்படுகிறது. டேக்கோமீட்டர் என்பது காரின் முகப்புப் பலகையில் சுழற்சி வேகத்தை அளவிடப் பயன்படும் ஒரு கருவியாகும்.
மேலும், 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள சார்லட்டோஸ்வில்லில் நடந்த "வெள்ளையின மேலாதிக்க பயங்கரவாதத் தாக்குதல்" தொடர்பான காணொளியையும் அச்சிறுவன் பார்த்துள்ளார்.
அத்தாக்குதலில் வெள்ளையின மேலாதிக்கவாதியான ஜேம்ஸ் அலெக்ஸ் பீல்ட்ஸ் ஜூனியர் என்பவர், கூட்டத்திற்குள் காரை மோதச்செய்து 32 வயதான ஹீதர் ஹெயர் என்பவரைக் கொன்றதோடு, 20-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தினார். இக்குற்றத்திற்காக பீல்ட்ஸ் பின்னர் 30 வெறுப்புக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இரு மசூதிகளில் 51 பேரைக் சுட்டுக் கொன்ற பிரென்டன் டாரன்ட் என்ற ஆஸ்திரேலிய பயங்கரவாதி நேரலை செய்த காணொளியை அச்சிறுவன் "வைத்திருந்ததாக அல்லது கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததாக" குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தவிர, 2022-ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் பபெலோ சூப்பர் மார்க்கெட்டில் பேட்டன் ஜென்ட்ரான் என்பவர் 10 கருப்பின மக்களைச் சுட்டுக் கொன்ற நேரலை காணொளியையும் அச்சிறுவன் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மொத்தம் சுமத்தப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுகளில், கடந்த மே மாதத்தில் அச்சிறுவன் "சைலன்சர் மற்றும் மேகசினுடன் கூடிய போலி துப்பாக்கி ஒன்றை" வைத்திருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அச்சிறுவனின் கைதை அறிவித்த ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தளபதி பாலா ஹட்சன், "வன்முறை தீவிரவாதப் பொருட்களை வைத்திருக்க அல்லது விநியோகிக்க முயலும் எவரையும் தடுக்க விசாரணை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டனர்" என்று கூறினார்.
"தனிநபர்களைக் கட்டுப்படுத்தி, நமது சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கியமாகும். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றும் தளபதி ஹட்சன் தெரிவித்தார்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அச்சிறுவன், அக்டோபர் 26-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.