இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், விமானி ஒருவர் சக விமானியைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து திருப்பி விடப்பட்ட, டெல் அவீவ் நோக்கிச் சென்ற விமானத்தில் இரண்டு ஆஸ்திரேலிய பிரஜைகளும் பயணித்துள்ளனர்.
அப்பயணிகள் சிட்னியைச் சேர்ந்த யூதத் தம்பதியர் என்பதை ஆஸ்திரேலியாவிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. இருப்பினும், கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த flyduba விமானம், சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
தாக்குதல் நடத்திய துணை விமானி ஓமான் நாட்டவர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் பிரதான விமானியைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் போது, விமானம் வெறும் இரண்டு நிமிடங்களில் சுமார் 17,000 அடிகள் கீழே சரிந்தது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கி, பயணிகள் அனைவரும் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர்,
ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ஹிலெல் நியூமேன் (Hillel Newman), இச்சம்பவம் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலைத் தனக்கு நினைவூட்டியதாகக் கூறினார்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக நியூமேன் தெரிவித்தார்.
"இஸ்ரேலை வெறுப்பவர்கள் அமைதியையும் வெறுக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அமைதியையும், ஆபிரகாம் உடன்படிக்கையையும், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் இஸ்ரேல் கொண்டுள்ள உறவையும் தகர்ப்பதற்கான ஒரு முயற்சியே இது" என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கையெழுத்தான 'ஆபிரகாம் உடன்படிக்கை' ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவைச் சீரமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் சுமார் 12,000 ஆஸ்திரேலியக் குடிமக்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 25,000 பேரும் வசித்து வருகின்றனர்.