ஐ.எஸ். (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் மனிதநேயமற்ற நடத்தையையும் மரண தண்டனையையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
குறித்த 13 பேரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருமாறு ஈராக் கோரிக்கை விடுத்தபோதிலும், அவர்களைத் திரும்ப அழைத்துவர எந்த முயற்சியும் எடுக்கப்படாது என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது.
இதன் மூலம் அல்பானீசி (Albanese) அரசாங்கம் தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய அரசு இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட போதிலும், ஈராக்கிலிருந்து எவரையும் ஆஸ்திரேலியா திரும்ப அழைக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
சிரிய பகுதிகளை குர்திஷ் படைகளிடமிருந்து சிரிய அரச படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவத்தால் ஈராக்கிற்கு அவசர அவசரமாக மாற்றப்பட்ட சுமார் 5,700 ஆண்களில் இந்த 13 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.
செப்டம்பர் தொடக்கத்தில், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் ஈராக்கின் உயர் நீதித்துறை அறிவித்திருந்தது.
ஈராக்கிய சிறைச்சாலை அமைப்புகளில் சித்திரவதைகளும் சட்டவிரோத மரண தண்டனைகளும் நீண்ட வரலாறாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்றும் குறிப்பிட்டுள்ளது.
"டாக்டர் ஜிஹாத்" என்று அழைக்கப்படும் பெர்த் நகரைச் சேர்ந்த சிறுவர் நல மருத்துவர் தாரிக் கம்லே (Tareq Kamleh) மற்றும் 2019-இல் குர்திஷ் படைகளால் கைது செய்யப்பட்ட யூசுப் சஹாப் (Yusuf Zahab) ஆகியோர் ஈராக்கியச் சிறையில் உள்ள ஆஸ்திரேலியர்களில் அடங்குவதாக நம்பப்படுகிறது.
"ஆஸ்திரேலியா போன்ற வலுவான ஜனநாயகமும் நீதித்துறை அமைப்பும் கொண்ட ஒரு நாடு, தனது 13 குடிமக்களைத் திரும்ப அழைத்து வந்து தனது சொந்த நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கும் வல்லமை படைத்தது" என்றும், ஈராக்கின் மீது இந்தச் சுமையைச் சுமத்துவதை விட்டுவிட்டு ஆஸ்திரேலியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.