ஆஸ்திரேலியாவின் Northern Territory பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பயிற்சியின்போது ராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
தலைநகர் டார்வினில் இருந்து தென்கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘மவுண்ட் பண்டே’ பயிற்சிப் பகுதியில் (Mount Bundey Training Area) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் ஐந்து சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
திங்கள்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயிற்சி நடவடிக்கையின் போது ராணுவ சிப்பாய் உயிரிழந்ததையும், ஐந்து சிப்பாய்கள் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை, இக்கட்டான சூழலில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வாகன விபத்து குறித்த தகவலைத் தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை 4:30 மணியளவில் NT அவசர சேவையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
திங்கள்கிழமை இரவு 9:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இருவர் 'ரொயல் டார்வின்' மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் NT முதல்வர் லியா பினோசியாரோ (Lia Finocciaro) தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பயிற்சி மையம்
117,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 'மவுண்ட் பண்டே' பயிற்சிப் பகுதி, நேரடித் தாக்குதல் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ராணுவ மையமாகும். இங்கு அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளுடன் இணைந்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை அடிக்கடி கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
பாதுகாப்புத் துறையின் விசாரணைக்கு உதவக் காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகNT காவல்துறை ஆணையர் மார்ட்டின் டோல் (Martin Dole) உறுதிப்படுத்தியுள்ளார்.