சிட்னியின் பிரபல பாதாள உலகக் கும்பல் ஒன்றின் உறுப்பினராக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இவரது கைபேசி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reece Fakhr என்ற அந்த இளைஞர், 'கோகனட் கார்டெல்' (Coconut Cartel) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாதாள உலகக் குழுவின் "முக்கியப் புள்ளியாக" செயல்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கொலைகள், கடத்தல்கள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களை ஒருங்கிணைத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பசிபிக் தீவு மக்களைக் குறிக்கும் வரலாற்று ரீதியான இழிவுச் சொல்லைத் தனது பெயராகக் கொண்டுள்ள இந்தக் கும்பல், சிட்னியின் 'அலாமெடின்' (Alameddine) குற்றவியல் கும்பலுடன் தீவிரப் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இரு குற்றவியல் நெட்வொர்க்குகளின் தலைவர்களும் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர்.
இதுவரை, இந்த இரு தரப்பு பாதாள உலக மோதல்களால் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நார்வெஸ்ட் (Norwest) பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில்பக்ரின் கைபேசி கண்டெடுக்கப்பட்ட பிறகே, அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தச் சிறுவன் முகத்தில் சுடப்பட்டு பலியான சிறிது நேரத்திலேயே, மூன்று சிறுவர்கள் உட்பட பல நபர்கள் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்து தப்பிச் சென்றதாகக் காவல்துறை முன்னரே தெரிவித்திருந்தது.
கொல்லப்பட்ட சிறுவன் பாதாள உலகத் தொடர்புகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், அவனது இறப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பக்ர் செவ்வாய்க்கிழமை காலை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையால் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டதை அடுத்து, புதன்கிழமை பிணை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைத்தது