ஆஸ்திரேலியா, வங்கி மற்றும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளை (Models) சரியாகப் பரிசோதிப்பதையும், பாதிப்புகளைத் தடுப்பதையும் நிரூபிக்க வகைசெய்யும் புதிய சட்டங்களை இயற்றத் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழிலநுட்பத்தை (Frontier AI) முறைப்படுத்துவதற்கான தேசிய தரநிலைகளை நடப்பாண்டு இறுதிக்குள் இறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட 'ஏஜென்ட்'கள் சார்ந்த சம்பவங்கள், வேகமாக வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தின் அபாயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
ஒவ்வொரு அபாயத்தையும் அரசாங்கமே நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தங்களின் பாதுகாப்பு அமைப்புகள் பயனுள்ளவையாக செயல்படுகின்றன என்பதை AI நிறுவனங்களே நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு விரும்புவதாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உதவி அமைச்சர் ஆண்ட்ரூ சார்ல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிட்னியில் இன்று உரையாற்றிய அவர், அபாயங்கள் உருவாகும் இடத்திலேயே அதற்கான பொறுப்பையும் சுமத்த வேண்டும் என்று வாதிட்டார்.
"சந்தை மட்டுமே இதற்கான தீர்வைத் தந்துவிட முடியாது. ஏனெனில், சந்தையின் ஊக்கத்தொகைகள் வேகம் மற்றும் திறனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. இத்துறையின் உச்சியில் இருக்கும் மனிதர்களாலேயே தன்னிச்சையாக இதன் வேகத்தைக் குறைக்க முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஆபத்தான செயல்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முயலாமல், AI நிறுவனங்கள் தொடர்ந்து ஆபத்துகளைப் பரிசோதிக்க வேண்டும் மற்றும் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையாக இருக்கும்.
மேலும், தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, மிகவும் விரிவான பிரத்யேக விதிகள் இயற்றப்பட்டால் அவை விரைவில் காலாவதியாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
"எனவே, பணிவிட பாதுகாப்பு, வங்கி மேற்பார்வை மற்றும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு போன்ற துறைகளில் பின்பற்றப்படும் 'அமைப்புகள் சார்ந்த முறைப்படுத்தல்' (Systems-based regulatory approaches) முறையிலிருந்து ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இது தயாரிப்புகளையும் சேவைகளையும் பாதுகாப்பாக உருவாக்குவதற்கான பொறுப்பை நிறுவனங்கள் மீதே சுமத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு ஆபத்தையும் குறிப்பிட்டுச் சொல்வதை விட, நிறுவனங்கள் பாதுகாப்பு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதே இதன் இலக்காகும். ஏதேனும் தவறாக நடந்ததா என்பது மட்டுமல்லாமல், ஆபத்துகளைக் கண்டறிந்து அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான வலுவான கட்டமைப்பு அங்கு உள்ளதா என்பதே கேள்வி," என்றார் சார்ல்டன்.
ஓபன்-ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஏஜென்ட்கள், சோதனையின் போது ஆஸ்திரேலிய அரசின் மெடிகேர் புள்ளிவிவரங்கள் அடங்கிய இணையதளம் உட்பட சில அரசு வலைத்தளங்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கடுமையான கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
தற்போது ஓபன்-ஏஐ நிறுவனம் கட்டாயப் பாதுகாப்புத் தேவைகள், சுயாதீன மதிப்பீடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதை ஆதரிப்பதோடு, சர்வதேச தரநிலைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய ஓபன்-ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், "மிக முக்கியமான முடிவுகளை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆய்வகங்கள் மட்டுமே தனித்து எடுக்க முடியாது," என்று தெரிவித்தார்.
"உலகளாவிய பேரழிவுகள் நிகழ்வதற்கு முன்பே, தவறுகளிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் துல்லியமான மற்றும் விரைவான அசம்பாவிதங்கள் குறித்த தகவலறிக்கை நெறிமுறைகள் நமக்குத் தேவை," என்றும் அவர் கூறினார்.
தற்போது முன்னணி AI ஆய்வகங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தீவிரத்தில், பாதுகாப்பை விட திறனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்றும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பரந்த அளவிலான போட்டி நிலவுவதாகவும் சார்ல்டன் குறிப்பிட்டார்.
இந்த ஓட்டப்பந்தயத்தில் 'வெற்றி பெறுவது' அல்லது 'விலகி இருப்பது' ஆஸ்திரேலியாவின் நோக்கமல்ல என்றும், மனித குலத்திற்குச் சேவை செய்யும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை மாற்றுவதே நாட்டின் பணி என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா AI தொழில்நுட்பத்தை 'உருவாக்க வேண்டும், கையாள வேண்டும்'
"சதித்திட்டம் தீட்டும் பிற நாடுகளோ அல்லது குற்றவாளிகளோ இந்த விதிகளுக்குக் கட்டுப்படப் போவதில்லை என்பதால், பாதுகாப்புத் தரநிலைகள் மட்டுமே போதுமானதாக இருக்காது," என்று சார்ல்டன் கூறினார்.
"விதிமுறைகளை மட்டுமே நம்பியிருப்பது குதிரையைச் சுற்றி வேலி அமைப்பது போன்றது; அந்த குதிரைக்கு இறக்கைகள் இருப்பது அப்புறம்தான் தெரியவரும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியா AI தொழில்நுட்பங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் ஆளப்படுகின்றன என்பதில் தனக்கென ஒரு குரலைப் பதிவு செய்ய விரும்பினால், அது இத்தொழில்நுட்பங்களை "உருவாக்கும் மற்றும் கையாளும": நாடாக மாற வேண்டும் என்றார்.
நிழல் வெளியுறவுத் துறை அமைச்சர் டெட் ஓ பிரையன், மிகவும் மேம்பட்ட AI மாதிரிகளுக்கான முன்னுரிமை அணுகலைப் பெறவும், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தவும் அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை உரையாற்றிய ஓ பிரையன், அமெரிக்கத் தொழில்நுட்பத்திற்கான தொடர் அணுகலை உறுதி செய்யும் அதே வேளையில், ஆஸ்திரேலியா தனது சொந்த சுயாதீன AI திறன்களை உருவாக்க அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்றார்.