மேற்கு ஆஸ்திரேலியாவின் Porongurup பகுதியில் நாய் எனச் சந்தேகிக்கப்படும் விலங்கின் தாக்குதல்களால் 80 ஆடுகள் உயிரிழந்துள்ளதை அடுத்து, நிதி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தமக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி பிராட் குளூயெட் (Brad Cluett) தெரிவித்துள்ளார்.
பேர்த்திற்கு (Perth) தென்கிழக்கே 385 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போரங்குரப் பகுதியில், மெரினோ பெட்டை ஆடுகள் மற்றும் வெள்ளை சபோக் கிடா ஆடுகள் மூலம் ஆட்டுக் குட்டிகளை பிராட் குளூயெட் வளர்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"ஆட்டுக்குட்டிகள் கடிக்கப்பட்டும், பெரிய ஆடுகள் முகப் பகுதியில் தாக்கப்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டும் இறந்து கிடப்பதை நாங்கள் கண்டுள்ளோம்," என அவர் கூறினார்.
குறிப்பாக கடந்த மே மாதம் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலில், 40 ஆட்டுக்குட்டிகளும் 10 பெட்டை ஆடுகளும் உயிரிழந்தன. ஆட்டுக்குட்டிகள் ஈனும் காலத்தின் நடுப்பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நாய் எதுவென்று துல்லியமாக அடையாளம் காண முடியாவிட்டாலும், காயங்களின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது அது வளர்ப்பு நாயாகவே இருக்கும் என அவர் நம்புகிறார்.
"சுமார் 400 மீட்டர் தொலைவில் சிவப்பு-பழுப்பு நிறத்திலான பெரிய நாய் ஒன்றைக் கண்டேன். அதைத் துரத்த முயன்றும் என்னால் பிடிக்க முடியவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காட்டு நாய்கள் மற்றும் டிங்கோக்களின் (Dingoes) தாக்குதல்கள் மாநில அளவில் கவனம் பெற்றாலும், வளர்ப்புப் பிராணிகளின் தாக்குதல்கள் உள்ளூர் அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.
இது குறித்து மேற்கு ஆஸ்திரேலிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஸ்டீவ் மெக்குயர் (Steve McGuire) கருத்து தெரிவிக்கையில், "விவசாய நிலங்களும் நகரங்களும் சந்திக்கும் பகுதிகளில் இது எப்போதுமே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. எங்களிடம் வேலை செய்யும் நாய்கள் இருந்தாலும், அவற்றையும் நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது," என்றார்.