சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக, அக்கிரமத்தைச் செய்த நபரை நீதிமன்றத்தில் தானே நேருக்கு நேர் குறுக்கு விசாரணை செய்து இழப்பீட்டு வழக்கில் வெற்றி பெற்ற பெண்ணின் செயல் மிகவும் அசாதாரணமானது மற்றும் அரிதானது என்று சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகப் பராமரிப்பாளராகப் பணியாற்றிய ரெக்ஸ் தாமஸ் ஆஸ்போர்ன் (Rex Thomas Osbourne) என்பவரால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்குமாறு சிட்னி உயர் நீதிமன்ற நீதிபதி கிரிகோரி சர்ட்டீஸ் (Justice Gregory Sirtes SC) கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தில், அப்பெண்ணிற்கு 4 முதல் 7 வயது வரை இருந்தபோது, தற்போது 85 வயதாகும் ஆஸ்போர்ன் அவர்மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை நீதிபதி உறுதி செய்தார்.
இந்த வழக்கில் அப்பெண் வழக்கறிஞர் எவரையும் நியமிக்காமல், தானே வாதாடினார்.
பழைய பாலியல் குற்றங்களுக்கு இழப்பீடு கோரும் வழக்கில், பாதிக்கப்பட்டவரே நேரில் ஆஜராகி வாதாடுவது "மிகவும் அரிது" என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த சட்ட விரிவுரையாளர் ஹென்றி கா (Henry Kha) கூறினார்.
"குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கும், வழக்கு விசாரணைக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
1980-களில் இந்த பாலியல் அத்துமீறல்கள் பலமுறை நடந்துள்ளதாக நீதிபதி சர்ட்டீஸ் முடிவு செய்தார்.
கடந்த 1987-ஆம் ஆண்டில் நான்கு குழந்தைகளுக்கு எதிராகப் புரிந்த 10 பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஆஸ்போர்ன் ஒப்புக்கொண்டதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்த குற்றச்சாட்டுகளில் மூன்று, இந்த பெண்ணுடன் தொடர்புடையவை ஆகும்.
அப்போது ஆஸ்போர்னுக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை பிணையும், 300 மணிநேர சமூக சேவை உத்தரவும் தண்டனையாக வழங்கப்பட்டிருந்தன. அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் சிறுவயதில் அப்பெண் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், அத்துமீறல் நடந்ததை நீதிபதி உறுதி செய்தார்.
சட்டப் படிப்பு படிக்காத அப்பெண், தனக்குத் தீங்கிழைத்தவரைத் தானே குறுக்கு விசாரணை செய்தபோது சில சிரமங்கள் எழுந்ததை நீதிபதி கவனத்தில் கொண்டார்.
"குறுக்கு விசாரணையின் போது அப்பெண் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டதை என்னால் உணர முடிந்தது. பேசும்போது அவர் சில நேரங்களில் ஏமாற்றத்துடனும் காட்டமாகவும் நடந்துகொண்டது, தனது வேதனையான வழக்கைத் தானே நடத்தும் கவலையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
அவரது முயற்சிகளின் உண்மைத்தன்மையை நான் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. எனவே அவரது நடத்தையால் வழக்கிற்கு எந்தப் பாதகமும் இல்லை என்று நீதிபதி கூறினார்.
இந்த பாலியல் அத்துமீறலே அப்பெண்ணின் மனநலப் பாதிப்புகளுக்கும், அவரது வேலை செய்யும் திறனைப் பாதித்ததற்கும் முக்கியக் காரணம் என நீதிபதி சர்ட்டீஸ் கண்டறிந்தார்.
முன்னதாக, அப்பெண் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு மீதும் வழக்கு தொடர்ந்திருந்தார். எனினும், நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி $1,50,000 டாலர்களை இழப்பீடாகப் பெற்றார்.