போலித் துப்பாக்கியை விற்பனை செய்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், நியூகாசில் (Newcastle) பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியைப் பழிவாங்கும் நோக்கில் சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் திகதி ஹேமில்டன் சவுத் பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரியான அந்தோணி நியூஜென்ட் (Anthony Nugent), போலித் துப்பாக்கியை விற்றதற்கான பழிவாங்கலாக அவரது வீட்டின் வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக மொஹமட் ராத் (Mohamad Raad, 46), டைரோன் துலி (Tyrone Tuli, 30) மற்றும் மொஹமட் அஸ்லான் லேதம்-அஸ்னான் (Mohd Azlan Latham-Aznan, 29) ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நியூகாசில் உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி பீட்டர் ஹாமில் (Justice Peter Hamill) இன்று அறிவித்தார்.
22,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான போலித் துப்பாக்கியை விற்ற ஆத்திரத்தில், இவர்கள் மூவரும் திட்டமிட்டு நியூஜென்ட்டைத் தேடிச் சென்று இக்குற்றத்தைச் செய்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
துப்பாக்கியால் சுட்ட முக்கியக் குற்றவாளியான மொஹமட் ராத்திற்கு அதிகபட்சமாக 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 17 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு அவர் பிணையில் வர முடியாது.
டைரோன் துலிக்கு 20 ஆண்டுகள் 4 மாதங்கள் அதிகபட்ச சிறைத்தண்டனையும், இச்சம்பவத்தில் குறைந்த அளவே தொடர்பிலிருந்த லேதம்-அஸ்னானுக்கு 15 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கூட்டுச் சதித் திட்டத்துடன் மூவரும் சம்பவ இடத்திற்குச் சென்றதையும், ராத் துப்பாக்கியால் சுட்டதையும் நடுவர் மன்றம் (Jury) உறுதி செய்தது.
துப்பாக்கி தற்செயலாக வெடித்தது என்ற குற்றவாளி ராத்தின் வாதத்தை நிராகரித்த நீதிபதி ஹாமில், "நியூஜென்ட்டின் மார்புக்கு மிக அருகில் வைத்து, அவரைக் கொல்லும் நோக்கத்துடனே இரட்டைக்குழல் துப்பாக்கியின் விசை (Trigger) திட்டமிட்டு இழுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.