பொதுமக்களின் பாதுகாப்பை விடப் பணத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படும் Lone Wolf என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் குற்றச் செயல்களை முடக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகளால் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் சதித்திட்டக் குற்றக் கும்பல்களில், இந்த Lone Wolf மோட்டார் சைக்கிள் கும்பல் மிகவும் ஆபத்தானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் வன்முறைச் சம்பவங்களில் இக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வியாழக்கிழமையன்று Taskforce Morpheu என்ற சிறப்புப் படையால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சோதனை நடவடிக்கையில், 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 18 வீடுகளில் சோதனைப் பிடியாணை (Search warrants) நிறைவேற்றப்பட்டதுடன், 10 துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது கோகைன், எம்.டி.எம்.ஏ (MDMA) போன்ற போதைப்பொருட்கள், சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் மற்றும் மின்சிகரெட்டுகள் (Vapes) பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சிறப்புப் படையில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசக் காவல்துறையினரும், காமன்வெல்த் சட்ட அமலாக்க முகமைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
நிதி ஆதாயத்திற்காகவே இக்கும்பல் வன்முறை மற்றும் மிரட்டல்களில் ஈடுபட்டு வருவதாகக் குவீன்ஸ்லாந்து காவல்துறை கண்காணிப்பாளர் ட்ராய் புகாலஸ் (Troy Pukallus) தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் இக்கும்பலுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. குற்றக் கும்பல்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவையாகக் கருதினாலும், அவற்றை அடையாளம் கண்டு முடக்குவதில் அதிகாரிகளாகிய நாங்கள் தீவிரமாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.
சட்டவிரோத புகையிலைப் பயன்பாடு இத்தகைய குற்றக் கும்பல்களுக்குப் பெருமளவிலான வருவாயை ஈட்டித் தருவதாக ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டளையதிகாரி கிரஹாம் கேம்ப்பெல் (Graeme Campbell) சுட்டிக்காட்டினார்.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் 'ராப்டார்' படைக் கட்டளையதிகாரி பிராட் அப்டி (Brad Abdy) கூறுகையில், "சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்கள் எங்கு இயங்கினாலும் அவை நிச்சயமாகக் காவல்துறையின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்படும். பல்வேறு மாநிலங்களின் உளவுத்துறை மற்றும் வளங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இத்தகைய குற்றக் கும்பல்கள் சட்டவிரோத முறையில் லாபம் ஈட்டுவது கடினமாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.