ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய போர் நினைவகத்தில் (Australian War Memorial) 25-வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் (Angus Taylor) மற்றும் போர்க்குற்றக் கொலை வழக்குகளை எதிர்கொண்டு வரும் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் (Ben Roberts-Smith) ஆகியோர் கலந்துகொண்டனர். ராபர்ட்ஸ்-ஸ்மித் இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் சிறப்பு அனுமதி அளித்திருந்தது.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கான பன்னாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஆப்பரேஷன் ஸ்லிப்பர்' (Operation Slipper) என்ற திட்டத்தின் கீழ் 2001-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியப் படைகள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டன.
அடுத்த இரண்டு தசாப்தங்களில், 35,000-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் ஆப்கானிஸ்தானிலோ அல்லது மத்திய கிழக்கில் ஆதரவுப் பணிகளிலோ சேவை ஆற்றினர்.
அங்கு ஆற்றிய சேவையின் விளைவாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த (ADF) 47 வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 263 பேர் காயமடைந்தனர்.
இப்போரின் போது கொல்லப்பட்ட வீரர்களில் பிரைவேட் ராபர்ட் போட் (Robert Poate) என்பவரும் ஒருவர். இன்றைய நினைவஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய அவரது தாயார் ஜானி போட் (Janny Poate), "இந்த வரலாற்றுப் கதையின் ஒரு பகுதியாக மாறிய குடும்பங்களைப் பற்றிப் பேசினார்.
"தங்களது துணைவர், பெற்றோர், குழந்தை அல்லது உடன்பிறந்தவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்று குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் நம்பின," என்று அவர் கூறினார்.
"ஒருபோதும் வீடு திரும்பாத குடும்ப உறுப்பினரின் பேரிழப்பை அனுபவித்த குடும்பங்களையும் அன்பானவர்களையும், அதன்பின்னர் இழப்புகளைச் சந்தித்தவர்களையும் நாம் நினைவுகூர்கிறோம்."
இன்றைய பிரதான நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட போராக மாறிய ஆப்கானிஸ்தான் போரில் பணியாற்றிய அனுபவங்களைப் பழைய மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படை வீரர்கள் பகிர்ந்துகொள்ளும் வீடியோ பதிவுகள் திரையிடப்பட்டன.
"அங்கு பணியாற்றிய ஒவ்வொரு நபரும் வெவ்வேறான ஆப்கானிஸ்தானை அனுபவித்தார்கள்," என்று ஆஸ்திரேலிய போர் நினைவகத்தின் இயக்குநர் மேட் ஆண்டர்சன் (Matt Anderson) தெரிவித்தார். "சிலர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவங்களைச் சுமந்துகொண்டு வீடு திரும்பினர்."
"ஆப்கானிஸ்தானில் நாம் அடைந்த வெற்றியை ஒருவேளை நாம் வேறுவிதமாக அளவிடக்கூடும்" என்று மதகுரு ராப் சதர்லேண்ட் ஒருமுறை கூறிய வார்த்தைகளை நினைவு கூர்வது மதிப்புமிக்கது என்று அவர் கூறினார்.
"இப்போரைப் பற்றி வரலாறு இறுதியாக என்ன முடிவுகளை வரைந்தாலும், ஆப்கானிஸ்தான் கதையின் ஒரு பகுதி எனக்கு ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது: ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி அங்கு பணியாற்றிய ஆண்களும் பெண்களுமே ஆவர்," என்று அவர் குறிப்பிட்டார்.