விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, குவாண்டாஸ் (Qantas) விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கினர்.
விமானத்தின் எகனாமிக் பகுதியில் (Economy cabin) பயணித்த பயணிகள், தம்மை மூட்டைப் பூச்சிகள் கடித்ததாகமுறைப்பாடு செய்ததையடுத்து , அவை கண்டறியப்பட்டன.
கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி பெர்த்தில் (Perth) இருந்து ரோம் (Rome) நோக்கிப் பயணித்த QF5 ரக விமானத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரோமில் இருந்து பெர்த் திரும்பவிருந்த QF6 விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) விமானம் தீவிர தூய்மைப்படுத்தல் பணிக்கு உட்படுத்தப்பட்டதாக Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் பயணிகள் இரு நாட்கள் வரை தாமதத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குவதற்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டதுடன், மாற்று விமான சேவைகளில் அவர்கள் பதிவு செய்யப்பட்டதாக குவாண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எகனாமிக் பகுதியின் சில ஆசனங்களில் கண்டறியப்பட்ட பிரச்சினை காரணமாக, எமது பொறியாளர்கள் மற்றும் பராமரிப்புக் குழுவினர் விமானத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்துவதற்காக சனிக்கிழமை ரோமில் இருந்து பெர்த் வரையான சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குவாண்டாஸ் விமானங்கள் வழக்கமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு 50 நாட்களுக்கு ஒருமுறை கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
சுமார் 6 மில்லிமீட்டர் அளவு கொண்ட, ஆறு கால்களை உடைய இந்த பூச்சிகள் இரத்தத்தை உணவாகக் உட்கொள்கின்றன. இவை பல மீற்றர் தூரம் வரை நகரக்கூடியவை என்பதோடு, பயணப் பைகள் மற்றும் படுக்கைப் பொருட்கள் மூலமாகவும் பரவக்கூடியவை.
இவை பெரும்பாலும் இடுக்குகளில் மறைந்திருந்து, இரவு வேளைகளில் உறைவிடத்தைத் தேடி வெளியே வருகின்றன. மனிதர்களின் உடல் வெப்பம் மற்றும் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றால் இவை ஈர்க்கப்படுகின்றன.
இவற்றின் கடிப்பதால் தோலில் சிவப்புத் தழும்புகள் ஏற்பட்டு அரிப்பு உண்டாகலாம். அரிப்பால் பாதிக்கப்பட்ட சில பயணிகளுக்கு 'ஆன்டிஹிஸ்டமைன்' (Antihistamines) மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், எனினும் விமானத்தில் அந்த மருந்துகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும் அச்செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நோயியல் பிரிவின் வெஸ்ட்மீட் மருத்துவமனையின் மருத்துவ பூச்சியியல் துறை இயக்குனர் ஸ்டீபன் டோகெட் (Stephen Doggett) இது தொடர்பில் கூறுகையில், விமானங்கள் மற்றும் அடிக்கடி பயணிகள் பயணிக்கும் ஆசனங்கள், குறிப்பாக வர்த்தக வகுப்பு (Business class) பகுதிகள் மற்றும் ஊழியர்களின் அறைகளில் மூட்டைப் பூச்சிகள் காணப்படும் அபாயம் எப்போதும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் விமான நிலைய விடுதிகளிலும் (Airport hotels) இவை அதிகளவில் காணப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.