ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2027 ஆசியக் கிண்ண போட்டிகளை நடத்தும் சவூதி அரேபியாவின் சூழ்நிலையைத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் (Football Australia) தெரிவித்துள்ளது.
ரியாத்தை நோக்கி ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையொன்றை சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி இடைமறித்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸ்ர் (Al Nassr) அணி பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டி திங்கள்கிழமை ஒரு மணி நேரம் தாமதமானது.
எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆசியக் கண்டத்தின் பிரதான கால்பந்து தொடரை நடத்தவுள்ள சவூதி அரேபியா, சமீபகாலமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கப்பல்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட அந்த அமைப்பின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
அத்துடன் ரியாத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீதும் உயிர் பலிகளை ஏற்படுத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
24 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்க இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், "சவூதி அரேபியாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக" ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ரியாத், ஜித்தா மற்றும் அல் கோபார் ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.