சிட்னியின் வடமேற்குப் பகுதியில் கடந்த மாதம் 12 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர்மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நோர்வெஸ்ட் (Norwest) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அச்சிறுவனை சுட்டதாகக் கூறி, கொலையாளி தடுப்புப் பிரிவினரால் (Homicide Squad) ஐசக் பெச்சாரா (Isaac Bechara) கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21 ஆம்திகதி மாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர், சிறுவன் தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதைக்கண்டனர்.
சம்பவ இடத்தில் அவசர மருத்துவப் பணியாளர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட அச்சிறுவன், ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்தபோது வீட்டிற்குள் ஒன்பது பேர் இருந்தபோதிலும் அவர்கள் காயமின்றி தப்பியதாகக் காவல்துறை கூறியுள்ளது.
19 வயது இளைஞன் வீட்டிற்குள் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்படும் என்று கொலையாளி தடுப்புப் பிரிவு அதிகாரி ஜோ டுயேஹி (Joe Doueihi) தெரிவித்தார்.
"19 வயது இளைஞன் கைத்துப்பாக்கியால் சுட்டதில், குண்டு சிறுவனின் தாடையில் பாய்ந்து இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று நாங்கள் குற்றம் சாட்டுவோம்," என்று அவர் கூறினார்.
"முன்னர் செய்திகளில் வெளியானதைப் போல, சிறுவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என்று நாங்கள் கூறவில்லை. இந்த 12 வயது சிறுவனின் பரிதாபகரமான மரணத்திற்கு 19 வயது இளைஞன் பொறுப்பு என்பதை நாங்கள் தெளிவாகக் குற்றம் சாட்டுகிறோம்."
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த ஒன்பது பேரில் சிலருக்கு சிட்னியின் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக அதிகாரி டுயேஹி தெரிவித்தார்.
"12 வயது சிறுவனின் மூத்த சகோதரருடன் தொடர்புடைய அந்த இளைஞர் குழுவிற்குத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுடன் (organised crime groups) தொடர்பு உள்ளது," என்று அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, 18 வயதுடைய மூன்று இளைஞர்களைக் காவல்துறை கைது செய்தது. அவர்களில் இருவர் மேலதிக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மூன்றாவது நபர் ரிவர்ஸ்டோன் (Riverstone) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிரமான தண்டனைக்குரிய குற்றத்தை மறைத்ததாக (concealing a serious indictable offence) அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
'ஸ்டிரைக் போர்ஸ் ஜானிலோ' (Strike Force Janilo) சிறப்புப் படையின் கீழ், சம்பவம் நடந்தபோது 18 வயதாக இருந்த பெச்சாராவை, சில்வர்வாட்டரில் (Silverwater) உள்ள சிறைச்சாலையில் வைத்து துப்பறிவாளர்கள் நேற்று கைது செய்தனர்.
பெச்சாரா இன்று பிணைப் பிரிவு உள்ளூர் நீதிமன்றத்தில் (Bail Division Local Court) ஆஜர்படுத்தப்பட்டார். அவர் பிணை கோரவில்லை என்பதுடன், பிணை முறைப்படி மறுக்கப்பட்டது.
தீவிரமான தண்டனைக்குரிய குற்றத்தை மறைத்தமை தொடர்பான மற்றொரு தனிப்பட்ட வழக்கில் அவர் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.