கொலம்பியாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஆஸ்திரேலிய குடும்பஸ்தர்மீது, 25 முறை கத்தியால் குத்தப்பட்டு அவர் உயிருக்கு போராடிவருகின்றார்.
சிட்னியைச் சேர்ந்த பிராங்க் ஸ்டீபன் ராமிரெஸ் (Frank Stephen Ramirez) என்பவர், கொலம்பியாவின் மெடலின் (Medellín) நகரில் நடைபெற்ற EDC இசை விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
அப்போது காரில் வந்த கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில், லாரல்ஸ் (Laureles) பகுதியில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக கொலம்பிய ஆங்கிலச் செய்தித் தளமான 'தி சிட்டி பேப்பர்' தெரிவித்துள்ளது.
அவரது தொடைகளில் 14 இடங்களிலும், கையில் 3 இடங்களிலும், வயிற்றுப் பகுதியில் 8 இடங்களிலும் என மொத்தம் 25 முறை கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் தொடங்கப்பட்டுள்ள இணையவழி நிதித்திரட்டல் (GoFundMe) பக்கத்தில், கடத்தல்காரர்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் 25 முறை கத்தியால் குத்தி, சித்திரவதை செய்து, வேகமாகச் சென்ற காரில் இருந்து வெளியே வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவரை ஒரு மனிதனாகக்கூட மதிக்காமல் தெருவில் சாகவிட்டுச் சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக, காவல் துறையினர் சரியான நேரத்தில் அவரைக் கண்டுபிடித்தனர். உடனடியாக மெடலின் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்," என்று அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கொலம்பியாவில் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய குடிமகனுக்கு தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) உறுதிப்படுத்தியுள்ளது.