பெண்களிடம் வரம்புமீறி நடந்து கொண்டதாக எழுந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மேற்கு ஆஸ்திரேலிய (WA) செனட்டர் ஜோர்டான் ஸ்டீல்-ஜான் (Jordon Steele-John) நாடாளுமன்றக் கட்சிக் குழுவில் (Party Room) இருந்து விடுப்பில் சென்றுள்ளதாக கிரீன்ஸ் (Greens) கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை இரவு கிரீன்ஸ் கட்சியின் தலைவர் டேவிட் ஷூபிரிட்ஜிற்கு (David Shoebridge) கட்சியின் ஏழு உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகின்றது.
2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் செனட்டருக்கு எதிராகப் பல முறைப்பாடுகள் எழுந்துள்ளதை அக்கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
"இந்தப் முறைப்பாடுகள் அனைத்தும் பெண்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பானவை" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், "கட்சியில் தொண்டர்களாகவோ அல்லது பொறுப்பாளர்களாகவோ இணைந்த பல பெண்களுக்கு, இந்தப் முறைப்பாடுகள் காரணமாக செனட்டருடன் தனியாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை நாங்கள் அறிவோம்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனட்டர் ஸ்டீல்-ஜானின் நடத்தை குறித்த கவலைகள் கட்சிக்குள்ளேயே நன்கு அறியப்பட்ட ஒன்றுதான் என மேற்கு ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் ABC செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ABC செய்தி நிறுவனத்திற்கு செனட்டர் ஸ்டீல்-ஜான் அளித்த விளக்கத்தில், விவகாரத்தை மேற்கு ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன். இது நான் இல்லாத ஒரு பிம்பத்தை சித்தரிக்க முயல்கிறது.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முறையான நீதியும் நியாயமான விசாரணை நடைமுறைகளும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஒரு சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள இந்த விவகாரத்தை மாநிலக் கட்சியின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளேன்.
எந்தவொரு குறிப்பிட்ட ஆதாரமும் இன்றி இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை; அவை அதற்குரிய முக்கியத்துவத்துடன் அணுகப்பட வேண்டும். யாரேனும் என் மீது குற்றச்சாட்டு முன்வைத்தால், அதை எதிர்கொள்ள நான் தயார்" என்று அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தை கட்சி மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர் டேவிட் ஷூபிரிட்ஜ், "இயற்கை நியதிக்கும் விசாரணை நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான மறுஆய்வு மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். கட்சியின் தலைவர் என்ற முறையில், புகார் விசாரணை நடைமுறையின் நேர்மை மிக முக்கியமானது என்பதில் நான் தெளிவாக உள்ளேன். இந்தச் சூழ்நிலையில் செனட்டர் ஸ்டீல்-ஜான் நாடாளுமன்றக் கட்சிக் குழுவில் இருந்து விடுப்பு கோரியுள்ளார், அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.