வெள்ளையின மேலாதிக்கக் கருத்துக்களை வெளிப்படுத்திய 19 வயது இளைஞர் ஒருவர், அந்நாட்டிலுள்ள இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் அதே நாளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் பெருந்திரள் துப்பாக்கிச் சூட்டுச் சதி ஒன்றை முறியடித்து, சிகாகோ புறநகர்ப் பகுதியான பாலடைனில் உள்ள டாக்கோ பெல் உணவகப் பணியாளரான அலெக்சாண்ட்ரோஸ் பாபோராகிஸைக் (Alexandros Paporakis) கைது செய்துள்ளனர்.
இந்திய மக்களைக் கொல்லத் தான் காத்திருக்க முடியாது என்று அவர் தனது சக ஊழியர்களிடம் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியேற்றம் மற்றும் திறமையான பணியாளர்களுக்கான விசாக்கள் தொடர்பான காரசாரமான அரசியல் மோதல்களால் உந்தப்பட்டு, தங்கள் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வு குறித்து இந்திய அமெரிக்கர்களிடையே கவலை அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
என்ன நடந்தது?
இல்லினாய்ஸில் உள்ள பாலடைன் புறநகர்ப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 40 மைல் (65 கி.மீ) தொலைவில் உள்ள அரோராவில் அமைந்துள்ள மிகப்பெரிய இந்து கோவிலைத் தாக்க பாபோராகிஸ் திட்டமிட்டதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
"இருப்பினும், தாக்குதலுக்கு இலக்கான குறிப்பிட்ட இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை; அது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ரு சிறப்பு நாளாக இருக்கும் என்று பாபோராகிஸ் தனது சக ஊழியர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, பாபோராகிஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தன்னைத் தொடர்புகொண்டு, தனது துப்பாக்கி இயங்காமல் சிக்கிக்கொண்டதாகக் கூறியதாக அவரது சக ஊழியர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாருடைய கண்ணிலும் படாமல் தான் மிகவும் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாக பாபோராகிஸ் கூறியதாக ABC7 Chicago செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி இயங்கத் தவறியதைக் காட்டும் வீடியோவை அவர் அனுப்பி, அதைச் சரிசெய்த பிறகு மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாகக் கூறியதாக Fox 32 Chicago செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது சக ஊழியர்கள் இருவர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து பாலடைன் மற்றும் பக்கத்து நகரமான மவுண்ட் ப்ராஸ்பெக்ட் பகுதிகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள், பாபோராகிஸ் தனது வீட்டை விட்டு வெளியேறியபோது அவரைக் கைது செய்தனர்.
"இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று பாலடைன் காவல் துறை அதிகாரி வில்லியம் நார்ட் தெரிவித்தார்.
பாபோராகிஸ் மீது "பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தல்" மற்றும் "சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல்" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை, விசாரணை தொடங்கும் வரை அவரைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.