தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள பரோசா பள்ளத்தாக்குப் பகுதியில், திங்கட்கிழமை அதிகாலை 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 2.26 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் தொடர்பாக, ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு நிறுவனத்துக்கு (Geoscience Australia) சுமார் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அடிலெய்ட் நகருக்கு வடகிழக்கே சுமார் 55 கிலோமீற்றர் தொலைவில், தனுண்டா நகரின் புறநகர்ப் பகுதியான ஸ்டோன் வெல் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிலான நிலநடுக்கத்தின்போது இரண்டு அல்லது மூன்று விநாடிகளுக்கு நில அதிர்வை உணரக்கூடும் என அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் நில அதிர்வியல் நிபுணர் தானியா பேஜ், 891 ஏபிசி அடிலெய்ட் வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.
தனுண்டா மற்றும் நூரியூட்டா பகுதிகளிலிருந்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வீடுகளில் அலமாரிகள் அதிர்ந்ததாகவும், பெரும் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
மேலும், இத்தகைய நிலநடுக்கங்கள் இடியோசை, அருகில் கனரக வாகனம் கடந்து செல்லும் சத்தம் அல்லது சிறிய வெடிப்புச் சத்தம் போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
நூரியூட்டா பகுதியில் வசிக்கும் மார்க் என்பவர், நிலநடுக்கம் மிகவும் வலுவாகவும் ஆழமான அதிர்வுச் சத்தத்துடனும் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“ஆரம்பத்தில் அது இடியோசை என்றே நினைத்தேன். அந்தச் சத்தம் என்னை உடனடியாகத் தூக்கத்திலிருந்து எழுப்பியது. எனது படுக்கையின் அடிப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த பூனையும் எழுந்து சிறிது நேரம் விழித்திருந்தது. சுமார் மூன்று விநாடிகள் அல்லது அதற்கும் அதிகமாக அதிர்வை உணர்ந்தேன்” என அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.5 இற்கும் குறைவான அளவில் பதிவாகும் நிலநடுக்கங்களால் பொதுவாகப் பெருமளவிலான சேதங்கள் ஏற்படுவது அரிதாகும்.