ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், பிராந்திய நகரமான வங்கரட்டாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவமொன்றில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் Helen Haines காயமடைந்துள்ளார்.
மர்பி வீதியில் இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக உதவி கோரி அழைப்புகள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவசரகால சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது, குறித்த வீதி இரு திசைகளிலும் போக்குவரத்திற்காக மூடப்பட்டது.
ஹெலன் ஹெய்ன்ஸ், 2019ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் இண்டி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
இந்நிலையில், அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
“இன்று பிற்பகல், எங்களின் அன்புக்குரிய ஹெலன், வங்கரட்டாவில் அமைந்துள்ள தனது தேர்தல் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே இடம்பெற்ற சம்பவமொன்றில் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரும் ஹெலனின் அலுவலகப் பணியாளர்களும் மேலதிக கருத்துகளை வெளியிடப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், பொதுமக்களும் ஊடகங்களும் தமது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் அவர் காயமடைந்த விதம் குறித்த மேலதிக தகவல்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.