ஆஸ்திரேலியாவின் வடக்கு டாஸ்மானியாவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் மீது மூன்று பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கால்பந்துக் கழகத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், வடக்கு டாஸ்மானியாவைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நபர், பிராக்னெல் (Bracknell) கால்பந்துக் கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான ஜோஷ் ஆடம்ஸ் (Josh Adams) என நம்பப்படுகிறது.
இவர் அடுத்த ஆண்டு முற்பகுதியில் லான்செஸ்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட வடக்கு டாஸ்மானிய கால்பந்து சங்கத்தின் (NTFA) தலைவர் பீட்டர் குட்வின், பயிற்றுவிப்பாளர் ஒருவர் மீது பாரதூரமான குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தமது சங்கத்துக்குத் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ளதால் மேலதிகக் கருத்துகளை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆடம்ஸ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டமை தொடர்பான செய்தியை முதலில் சுயாதீன ஊடகமொன்று வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தியில், பிராக்னெல் கால்பந்துக் கழகத்தின் தலைவர் நிக்கோல் ஜோன்ஸுக்கும், குற்றச்சாட்டில் குறிப்பிடப்படும் பாதிக்கப்பட்ட நபரின் தாயாருக்கும் இடையில் பரிமாறப்பட்ட தனிப்பட்ட செய்திகள் குறித்த விபரங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நிக்கோல் ஜோன்ஸ் நேற்று சமூக ஊடகத்தின் ஊடாக அறிவிப்பொன்றை வெளியிட்டு, கழகத் தலைவர் பதவியிலிருந்தும் அனைத்து உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட செய்திகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து வடக்கு டாஸ்மானிய கால்பந்து சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பீட்டர் குட்வின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சுயாதீனமாகப் பரிசீலிக்கப்படுவதற்காக அவுஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்திடம் (AFL) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட கருத்துகள் தொடர்பில் கழகத் தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளதுடன், அனைத்து உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் கண்ணியத்துடனும், கருணையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் எனவும் வடக்கு டாஸ்மானிய கால்பந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் வரை பிராக்னெல் கால்பந்துக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்வது குறித்து ஆடம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.