ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில், Virgin ஆஸ்திரேலியா விமானம் ஒன்று குவாண்டாஸ் விமானத்தின் குறுக்கே சென்ற சம்பவத்தின்போது, பணியிலிருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அதிக சோர்வு அபாயம் கொண்ட நிலையில் இருந்ததாக விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB), சிட்னி விமான நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு விமானப் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இவை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் அபாயத்தை எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆறு விசாரணைகளின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி, நியூகாசிலில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் திசைதிருப்பப்பட்ட Virgin ஆஸ்திரேலியா விமானம் VA1589, உள்நாட்டு முனையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அந்த விமானத்தை முன்னால் சென்றுகொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தைப் பின்தொடர்ந்து, ஓடுபாதை 25க்கு முன்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், Virgin விமானத்தின் விமானி நிறுத்துவதற்கான அறிவுறுத்தலை மட்டுமே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முழுமையற்ற உறுதிப்படுத்தலைக் கட்டுப்பாட்டாளர் கவனிக்காமல் அடுத்த பணிகளுக்குச் சென்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிது நேரத்துக்குப் பின்னர், குவாண்டாஸ் விமானத்தின் பணியாளர்கள் விர்ஜின் விமானம் குறுக்குப் பாதையை அணுகுவதைக் கவனித்து, விமானத்தை நிறுத்தினர். இதனால் இரு விமானங்களும் மோதிக்கொள்ளும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
சம்பவத்தின்போது, விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் அந்தக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே பணியில் இருந்ததாகவும், அவருக்கு அதிக சோர்வு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகப் பணிப்பட்டியல் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கு முந்தைய இரவு, கட்டுப்பாட்டாளர் இரவு 8.50 மணிக்கு பணியை முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்குப் பணியைத் தொடங்க வேண்டியிருந்தது. இருப்பினும், சம்பவத்தின்போது தாம் சுறுசுறுப்பாகவும் பணிக்குத் தகுதியான நிலையிலும் இருந்ததாக அவர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிக சோர்வு அபாயம் என மதிப்பிடப்படுவது, ஒருவர் உண்மையில் சோர்வடைந்திருந்தார் அல்லது அவரது பணித்திறன் பாதிக்கப்பட்டிருந்தது என்பதைத் தானாகவே உறுதிப்படுத்தாது என விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மற்றொரு சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெற்றது. அப்போது, ஜெட்ஸ்டார் விமானம் ஒன்றை நிறுத்துமிடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்த அனுமதி வழங்கிய அதே கட்டுப்பாட்டாளர், சுமார் 30 விநாடிகளுக்குப் பின்னர் அதே பாதையில் குவாண்டாஸ்லிங்க் விமானம் செல்லவும் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆனால், குவாண்டாஸ்லிங்க் விமானத்தின் பணியாளர்கள் ஜெட்ஸ்டார் விமானம் பின்னோக்கி நகர்வதைக் கவனித்து, சுமார் 100 மீற்றர் தொலைவில் விமானத்தை நிறுத்தினர். இதனால் மற்றொரு மோதல் அபாயமும் தவிர்க்கப்பட்டது.
இரு சம்பவங்களிலும் விமானப் பணியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்கள் அபாயத்தை விரைவாக அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்துகள் தவிர்க்கப்பட்டதாக ATSB தெரிவித்துள்ளது.
சிட்னி விமான நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறை, நீண்ட நேரப் பணி மற்றும் சோர்வு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆகியவை இந்தச் சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்தனவா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை சம்பவங்களுக்கான காரணங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையை வழங்கும் Airservices Australia, விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அறிக்கைகளை ஆய்வு செய்வதாகத் தெரிவித்துள்ளது.