குயின்ஸ்லாந்து மாநிலத்தில், பிரிஸ்பேனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பப்பில் இடம்பெற்ற வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 19 வயது இளம்பெண் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஜிம்பூம்பாவைச் சேர்ந்த வானா-ரீஸ் ஷஸ்டர்-டோகியடாவ் (Vana-Reese Schuster-Togiatau) என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு லோகன்ஹோமில் உள்ள Fitzys Loganholme பப்பில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியின்போது தலையிலும் கழுத்திலும் துப்பாக்கிக் காயமடைந்தார்.
பிரின்சஸ் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் முகமூடி அணிந்த இருவர் வாகனத்திலிருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் நால்வர் காயமடைந்தனர். சக்கரி உக்ட்மன், பிரோடி பிளாக்வுட் மற்றும் கேன் பாரெட் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
லோகன் மாவட்ட துப்பறியும் பிரிவு ஆய்வாளர் இயான் கால்பின், இந்தச் சம்பவம் தற்போது கொலை வழக்காக விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“
நண்பர்களுடன் ஒரு இரவை மகிழ்ச்சியாகக் கழிக்கச் சென்ற 19 வயது இளம்பெண்ணின் உயிர் மிகக் கோழைத்தனமான முறையில் பறிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் வரை காவல்துறை தனது முயற்சியை நிறுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் துணிச்சலுடன் முன்வந்து காவல்துறைக்கு உதவுமாறு ஆய்வாளர் கால்பின் வேண்டுகோள் விடுத்தார்.
“இந்தக் குற்றத்தில் யார் தொடர்புடையவர்கள் என்பதையும், இது ஏன் நடந்தது என்பதையும் சிலர் நிச்சயமாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் முன்வந்து தகவல் வழங்க வேண்டும்,” என்றார்.
ந்த வழக்கில் சுமார் 80 துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கும்பல் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தையும் காவல்துறை நிராகரிக்கவில்லை.
எனினும், தற்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், இந்தத் தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிவதும் முதன்மை நோக்கமாக இருப்பதாக ஆய்வாளர் கால்பின் தெரிவித்தார்.
வானா-ரீஸின் குடும்பம் மிகக் கடினமான மனநிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்ற மூவரில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வானா-ரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தொடங்கப்பட்ட GoFundMe நிதி திரட்டும் முயற்சியில் இதுவரை 53,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளதுடன், 70,000 டொலர்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.