1980 ஆம் ஆண்டு பார்முலா ஒன் Formula 1 உலக சாம்பியனான ஆலன் ஜோன்ஸ் Alan Jones தனது 80ஆவது வயதில் காலமானார்.
தனது பார்முலா ஒன் பந்தய வாழ்க்கையில் 12 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அவர், உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களில் சேர் ஜாக் பிரபாமுடன் இணைந்தார்.
கடந்த திங்கட்கிழமை தனது 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆலன் ஜோன்ஸ், மோட்டார் பந்தயத் துறையில் தனது கனவை நனவாக்குவதற்காக 1970ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார்.
1973ஆம் ஆண்டு GRD அணியின் அனுசரணையுடன் பார்முலா 3 போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதே ஆண்டில் சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த அவர், பிரிட்டிஷ் பார்முலா 3 சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
1975ஆம் ஆண்டு ஹெஸ்கெத் (Hesketh) அணியின் சார்பில் பார்முலா ஒன் போட்டிகளில் அறிமுகமானார். அந்தப் பருவத்தில் நியூர்பர்க்ரிங் (Nürburgring) போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றமை அவரது சிறந்த பெறுபேறாக அமைந்தது.
1976ஆம் ஆண்டு சர்டீஸ் (Surtees) அணியுடனான பருவம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், அவரது ஃபார்முலா ஒன் எதிர்காலம் கேள்விக்குறியானது.
எனினும், 1977ஆம் ஆண்டு தென்னாபிரிக்க வீரர் டொம் பிரைஸ் (Tom Pryce) விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஷேடோ (Shadow) அணி ஆலன் ஜோன்ஸை தனது அணியில் இணைத்துக்கொண்டது.
அந்த ஆண்டில் ஒஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தனது முதல் ஃபார்முலா ஒன் வெற்றியைப் பதிவு செய்தார்.
இதன் பின்னர், பெராரி அணி அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்த போதிலும், பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது.
இதற்குப் பதிலாக கில்லஸ் வில்லென்யூவை (Gilles Villeneuve) பெராரி அணி ஒப்பந்தம் செய்துகொண்டது. இதனையடுத்து ஆலன் ஜோன்ஸ் வில்லியம்ஸ் (Williams) அணியுடன் இணைந்தார்.
1980ஆம் ஆண்டு வில்லியம்ஸ் அணியின் சார்பில் போட்டியிட்ட அவர், அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் வெற்றிபெற்றார்.
அந்தப் பருவத்தில் மொத்தம் ஐந்து கிராண்ட் பிரிக்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்த ஆலன் ஜோன்ஸ், 1980ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், பார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.