நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மிட் நார்த் கோஸ்ட் பகுதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 72 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொங்கரின்னி (Congarinni) பகுதியில் உள்ள கோரெல்லா க்ளோஸ் (Corella Close) என்ற வீதியில் அமைந்துள்ள வீட்டில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று முற்பகல் 11 மணியளவில் அவசர சேவையினர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சுமார் 70 வயதுடைய பெண்ணொருவரின் சடலத்தையும், கத்தி ஒன்றை வைத்திருந்த 72 வயதுடைய ஆண் ஒருவரையும் பொலிஸார் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபரைப் பொலிஸார் எதிர்கொண்டு கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த குறித்த நபருக்கு அவசர மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்ததுடன், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் எனச் சந்தேகிக்கப்படும் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வீடு குற்றத்தடயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்ணின் மரணத்திற்கான சூழ்நிலைகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.