ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (05) மாத்திரம் சுமார் 30 விமானங்கள் இந்த அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் திசைதிருப்பப்பட்டதுடன், வெடிகுண்டு நிபுணர்கள் விமானங்களைச் சோதனையிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு டோக்கியோவிலிருந்து சிட்னி வந்த All Nippon Airways (ANA) விமானத்தில் பயணித்தவர்களை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் வரவேற்று சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விமானம் இரவு 8 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு வார விடுமுறையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பெட்ரிக் வைல்ட் என்ற பயணி, விமானத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, மேலும் 20 நிமிடங்கள் விமானத்துக்குள் இருக்குமாறு கூறப்பட்டதாகவும், பின்னர் அது ஒன்றரை மணித்தியாலங்களாக நீடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, பெடரல் பொலிஸார் அவர்களை வரிசையாக நிற்குமாறும், தங்களது பொதிகளை தரையில் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதிகள் அனைத்தும் மோப்ப நாய்கள் மூலம் சோதனையிடப்பட்டதுடன், தானியங்கி துப்பாக்கிகளை ஏந்திய ஐந்து அல்லது ஆறு பொலிஸ் அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பயணிகள் விமான நிலையத்தின் வரியற்ற விற்பனை நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலும் ஒரு மணித்தியாலம் காத்திருக்க வைக்கப்பட்ட பின்னர், பொதிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான காரணம் குறித்து தங்களுக்கு முறையான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என பயணி தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் ஒன்றுக்கு மாலை 6 மணிக்குப் பின்னர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், சிட்னி விமான நிலையத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு சம்பவத்துக்கும் ஐரோப்பிய நாடுகளில் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.