மெல்போர்ன் தென்கிழக்குப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
டன்டெனாங் (Dandenong) பகுதியில் உள்ள வூட்லீ வீதியில் (Woodlee Street) இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவசரகால சேவையினர், கத்திக்குத்துக் காயங்களுடன் மூவரைக் கண்டெடுத்துள்ளனர்.
இதில், 28 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், 26 மற்றும் 35 வயதுடைய இரு ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குடும்ப வன்முறை விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என பொலிஸ் அதிகாரி ரெபெக்கா ஹால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகிலுள்ள டன்டெனாங் நார்த் ஆரம்பப் பாடசாலை, பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்றபோது மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்குள் இருந்ததாகவும், அவர்கள் வீதிக்கு வர அனுமதிக்கப்படாததால் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்களை எவ்வாறு அழைத்துச் செல்வது என்பது தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு எதிரே இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டதாகவும், பொலிஸார் பாதுகாப்பானது என அறிவித்த பின்னர் வழமைக்குத் திரும்பியதாகவும் பாடசாலை அதிபர் போல் ஹில்டன் பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற வூட்லீ வீதியில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.