நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், அந்நாட்டின் அடுத்த அரசாங்கம் யார் தலைமையில் அமையும் என்பதைத் தீர்மானிக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான மத்திய வலதுசாரி தேசியக் கட்சி (National Party) நாடாளுமன்றத்தில் 42 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னாள் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தலைமையிலான மத்திய இடதுசாரி தொழிலாளர் கட்சி (Labour Party) 36 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து தேர்தல் ஆணைக்குழுவின் கணிப்பின்படி, தேசியக் கட்சி அதன் கூட்டணிக் கட்சிகளான ACT மற்றும் NZ First ஆகியவற்றுடன் இணைந்து மொத்தம் 67 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தொழிலாளர் கட்சி, பசுமைக் கட்சி, மாவோரி கட்சி மற்றும் புதிதாக உருவெடுத்துள்ள Opportunity கட்சி ஆகியவை இணைந்து 63 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
எனினும், Opportunity கட்சி எந்தத் தரப்புடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
தேசியக் கட்சித் தலைவர் கிறிஸ்டோபர் லக்ஸன் மீண்டும் ஆட்சியமைப்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்கப் போவதாக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவுகள் நவம்பர் 27ஆம் திகதி
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க அடிப்படையில் 120 ஆசனங்களில் 61 ஆசனங்கள் பெரும்பான்மையாகத் தேவைப்படுகின்றன.
எனினும், அந்நாட்டின் கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறையின் (MMP) கீழ், மேலதிக ஆசனங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் மொத்த ஆசன எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதனால் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையும் மாறுபடலாம்.
இம்முறை தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை 66 ஆசனங்களாக உள்ளதாக நியூசிலாந்தின் அரச ஒலிபரப்பு நிறுவனமான Radio New Zealand (RNZ) தெரிவித்துள்ளது.
கட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி 29.36 சதவீத வாக்குகளையும், தேசியக் கட்சி 29.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
பசுமைக் கட்சி 13.30 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வரலாற்றிலேயே அதிகபட்ச ஆதரவைப் பதிவு செய்துள்ளது. ACT கட்சி 10.92 சதவீதத்தையும், NZ First கட்சி 9.78 சதவீதத்தையும், Opportunity கட்சி 5.96 சதவீதத்தையும் பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் மற்றும் தமது தேர்தல் தொகுதிக்கு வெளியே வாக்களித்தவர்களின் விசேட வாக்குகள் இறுதி முடிவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் சுமார் 700,000 விசேட வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவை இடதுசாரிக் கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
இதுவரை சுமார் 400,000 விசேட வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளன. அவற்றில் 96,000 வாக்குகள் வெளிநாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன.
இந்த வாக்குகள் அனைத்தும் நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ள இறுதி முடிவுகளில் சேர்க்கப்படும். இதனால் புதிய அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவு ஏற்பட இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
மீண்டும் ஆட்சியமைப்பதில் நம்பிக்கையுடன் லக்ஸன்
தனது தேசியக் கட்சி அதிகளவிலான ஆசனங்களைப் பெற்றுள்ளதால், அரசாங்கத்தை அமைப்பதற்கான மக்கள் ஆணை தமக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 42 ஆசனங்களைப் பெற்றுள்ள தமது கட்சிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை தமது கட்சியும் நாட்டு மக்களும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தோல்வியடைந்துள்ளனர். நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ், பாதுகாப்பு அமைச்சர் போல் கோல்ட்ஸ்மித் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஜெர்ரி பிரவுன்லீ ஆகியோர் தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து அமைச்சர் கிறிஸ் பிஷப்பும் தோல்வியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் தமது கட்சியின் சில முக்கிய உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலிருந்து இழக்கச் செய்துள்ளதாக லக்ஸன் கவலை தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கூட்டணிக்கும் வாய்ப்பு
தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த அரசாங்கத்தின் உண்மையான பலம் மற்றும் அதன் அமைப்பு குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும், இறுதி முடிவுகள் வெளியான பின்னர் இது தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை இம்முறை தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடம்பிடித்திருந்தன.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நியூசிலாந்தில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் போரும் அதனால் ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் நெருக்கடியும் அந்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியைத் தீர்மானிக்கக்கூடிய புதிய கட்சி!
தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இறுதி வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை இழந்தால், ஆட்சியமைப்பதற்கு மத்திய நிலைப்பாட்டைக் கொண்ட Opportunity கட்சியின் ஆதரவு அவசியமாகலாம்.
அக்கட்சியின் தலைவி கியுலே வோங் (Qiulae Wong), இறுதி முடிவுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேசியக் கட்சி அல்லது தொழிலாளர் கட்சி ஆகிய இரு தரப்புடனும் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நிலையான வர்த்தகத் துறை ஆலோசகராகப் பணியாற்றிய வோங், 2025 நவம்பரில் Opportunity கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் கட்சியின் பெயர் மற்றும் அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், கட்சிக்கான மக்கள் ஆதரவையும் கணிசமாக அதிகரித்துள்ளார்.
அக்கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அனைவருக்குமான அடிப்படை வருமானத் திட்டம் அமைந்துள்ளது.
இதன்படி, பெரும்பாலான நியூசிலாந்து குடியிருப்பாளர்களுக்கு ஆண்டுக்கு 19,400 நியூசிலாந்து டொலர்கள் அடிப்படை வருமானமாக வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி முன்மொழிந்துள்ளது.
இதற்கான நிதியை ஆண்டுதோறும் 1.75 சதவீத நில வரி மூலம் திரட்டவும், நாட்டின் வருமான வரி முறையை எளிமைப்படுத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் நியூசிலாந்தின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் Opportunity கட்சி முக்கிய பங்காற்றக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.