சீன உளவாளியாகச் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆலிஸ் ஹுவாங் தொடர்புடைய நிறுவனத்தின் ஆஸ்திரேலியக் கிளைக்கு, செய்தித்தாள் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஒருவரே இயக்குநராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங், சீன உளவாளியாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் ஆஸ்திரேலியக் கிளையான மெகாஸ்பீட் ஆஸ்திரேலியா (Megaspeed Australia) தொடர்பான பதிவுகள் ஆஸ்திரேலியப் பிணையங்கள் மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் (ASIC) ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, ஷாங்காயில் பிறந்த 29 வயதுடைய கை காங் என்பவர், 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் ஒரே இயக்குநராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
உலகின் பெறுமதிமிக்க நிறுவனமான என்விடியாவின் (Nvidia) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங்குடன் (குடும்ப உறவு எதுவுமில்லை) தமக்குத் தொடர்பு இருந்ததை கடந்த திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆலிஸ் ஹுவாங் சீன அரசாங்கத்துக்காகச் செயற்பட்டாரா என்பது தொடர்பில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
கிராமப்புறத்திலிருந்து சிட்னியின் வர்த்தக மையம் வரை!
கை காங்கின் தந்தை ABC செய்திச் சேவையிடம் தெரிவிக்கையில், வடக்கு விக்டோரியாவின் சிறிய கிராமப்புற நகரமொன்றில் உள்ள தனது கடையில் மகன் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மெகாஸ்பீட் நிறுவனம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும், தனது கடையின் முகவரி மகனின் நிறுவன இயக்குநர் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மெகாஸ்பீட் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வணிக முகவரியாக, 700 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் உள்ள சிட்னியின் மார்ட்டின் பிளேஸ் (Martin Place) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள 20 மார்ட்டின் பிளேஸ் கட்டடத்தின் ஒரு தளத்தில் குடிவரவு சட்டத்தரணிகள், கணக்காளர்கள் மற்றும் தனியார் புலனாய்வாளர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதே முகவரியில் இயங்கும் குடிவரவு சட்ட நிறுவனமொன்றின் ஊழியர், மெகாஸ்பீட் நிறுவனத்தையோ அதன் இயக்குநர் கை காங்கையோ தமக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மெகாஸ்பீட் அவுஸ்திரேலியா நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை, அதன் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விநியோகிக்க முடியவில்லை என ASIC ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டடத்தில் அலுவலக இடங்களை ஒருவருக்கு நாளொன்றுக்கு 17 அவுஸ்திரேலிய டொலர் முதல் வாடகைக்கு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எந்தவொரு பணியையும் முன்னெடுத்ததாகவோ, நிதிச் சொத்துக்களைக் கொண்டிருப்பதாகவோ தகவல்கள் இல்லை. அத்துடன், நிறுவனத்தில் வேறு ஊழியர்கள் உள்ளனரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில், கை காங்கைத் தொடர்புகொண்டு கருத்தறிய முடியவில்லை. அவர் தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பதாகக் கூறப்படுவதுடன், அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
ஆலிஸ் ஹுவாங் விவகாரம் மற்றும் அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்கள் ஏதேனும் கசிந்துள்ளனவா என்பது தொடர்பில் FBI விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இதுவரை அதிகம் அறியப்படாத நிறுவனமாக இருந்த மெகாஸ்பீட் இன்டர்நெஷனல், என்விடியாவின் நுண்செயலிகளை (Microchips) கொள்வனவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
தரவுப் பரிமாற்ற மையங்களை (Data Centres) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் இந்த நுண்செயலிகள் மூலம் கணினிச் செயற்பாட்டுத் திறன் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.
குறுகிய விற்பனை ஆய்வு நிறுவனமான கல்பர் ரிசேர்ச் (Culper Research) வெளியிட்ட தகவலின்படி, சீனாவும் இத்தகைய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களில் ஒன்றாகும்.
எனினும், ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்ற குற்றச்சாட்டை சீன வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் சீனாவுக்கு எதிரான அவதூறுகள் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் பெறுமதி 230 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகச் சரிவடைந்துள்ளது.
இதனையடுத்து, நிறுவனத்துக்கும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்கும் எதிராகப் பங்குதாரர்கள் குழுநிலை வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
எனினும், நிறுவனத்தின் அல்லது நாட்டின் இரகசியத் தகவல்கள் எதுவும் கசிந்திருக்கவில்லை என நம்புவதாக என்விடியா தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் நிறுவன மட்டத்திலான உள்ளக விசாரணையையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜென்சன் ஹுவாங் என்விடியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகத் தொடர்ந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.