ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் நடைபெறவுள்ள பிளாக் பிரைடே (Black Friday) மற்றும் சைபர் மண்டே (Cyber Monday) சிறப்புத் தள்ளுபடி விற்பனைகளின்போது, நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழு (ACCC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விற்பனைக் காலப்பகுதியில் சுமார் 7 பில்லியன் டொலர் பெறுமதியான கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு சில்லறை வர்த்தகத் துறைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக, அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்திவிட்டு, குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தள்ளுபடி வழங்கும் நிறுவனங்கள், தவறான நேரக் கணிப்புக் கருவிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அவசரமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்யத் தூண்டும் வர்த்தகர்கள் மற்றும் உண்மையற்ற விலை ஒப்பீடுகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, அந்தக் காலக்கெடு முடிந்த பின்னரும் அதே தள்ளுபடியைத் தொடர்வது மற்றும் பொருட்களின் விலையைப் பொய்யாக அதிகரித்துக் காட்டி பின்னர் தள்ளுபடி வழங்குவதாக விளம்பரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படவுள்ளன.
இவ்வாறான விளம்பரங்களில் சிறிய எழுத்துக்களில் நிபந்தனைகளை வெளியிடுவது, தவறான பிரதான விளம்பரச் செய்திகளுக்கு நியாயம் கற்பிக்கப் போதுமானதல்ல என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இம்முறை மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
எனினும், இம்முறை முதன்முறையாக இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரத் தளங்களிலும் வர்த்தக நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளன.
நுகர்வோர் விளம்பரங்களில் குறிப்பிடப்படும் தள்ளுபடி வீதங்களை மட்டும் நம்பாமல், பொருட்களின் இறுதி விலையை அவதானிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தள்ளுபடிகளுக்கான நிபந்தனைகள் மற்றும் விலக்குகள் தொடர்பில் ஆராய்வதுடன், வெவ்வேறு வர்த்தக நிலையங்களில் ஒரே பொருளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே கொள்வனவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பிரதி தலைவி காட்ரினா லோவ் தெரிவிக்கையில், உண்மையான தள்ளுபடிகள் மற்றும் சேமிப்புகளை நுகர்வோர் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆனால், சில வர்த்தக நிறுவனங்கள் உண்மையில் சிறந்த விலைச் சலுகை கிடைக்காதபோதும், வாடிக்கையாளர்கள் பெரும் சலுகையைப் பெறுவதாக நம்ப வைக்கும் உத்திகளைக் கையாளுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இணையக் கொள்வனவு மோசடிகள் குறித்தும் எச்சரிக்கை
இதேவேளை, போலியான இணைய வர்த்தக நிலையங்கள் மற்றும் சட்டபூர்வமற்ற விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்தும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நிதி இழப்புகள் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் ScamWatch அமைப்புக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 58.7 சதவீதமானவை கொள்வனவு மற்றும் விற்பனை மோசடிகள் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இணையத் தளங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, வாகனங்கள், பயன்படுத்தப்பட்ட ஆடைகள், இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களைப் போலியாக விளம்பரப்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலியான பொருட்களின் படங்கள், இணையத்தளங்கள் மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை உருவாக்குவதன் மூலம் இத்தகைய மோசடிகள் மேலும் எளிதாகவும் நம்பகத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதாக ScamWatch தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை இணையக் கொள்வனவு நிலையங்களைப் போன்று தோற்றமளித்த பல மோசடி இணையத்தளங்கள் உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட மோசடி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தேசிய மோசடி தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் மோசடி முறைப்பாடுகள் ஓரளவு குறைந்துள்ளதுடன், பதிவான நிதி இழப்புகளும் 3 சதவீதத்தால் குறைந்து 250 மில்லியன் டொலருக்கும் சற்று அதிகமாகப் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், பிளாக் பிரைடே மற்றும் சைபர் மண்டே விற்பனைகளின்போது அவசரப்பட்டு பொருட்களைக் கொள்வனவு செய்யாமல், விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையையும் உண்மையான விலையையும் உறுதிப்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.