ஆஸ்திரேலியாவின் பிராந்திய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான விமானக் கட்டணங்கள் அதிகமாகக் காணப்படுவதுடன், இவ்விமானப் பாதைகளின் எதிர்காலச் செயற்பாடுகளும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக உற்பத்தித்திறன் ஆணைக்குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில், பிராந்திய மற்றும் தொலைதூர விமானப் பயணக் கட்டணங்கள் ஒரு பயணிக்கு 11 சதவீதமும், ஒரு கிலோமீற்றருக்கான கட்டணத்தில் 13 சதவீதமும் முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணங்களை விட அதிகமாக இருந்துள்ளன.
குறிப்பாக, சில குறுகிய தூர விமானப் பாதைகளில் ஒரு கிலோமீற்றருக்கான கட்டணம் நகரங்களுக்கு இடையிலான கட்டணத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. அதிக இயக்கச் செலவுகள், குறைந்த பயணிகள் எண்ணிக்கை மற்றும் போட்டித்தன்மை இல்லாமை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இவ்விமானப் பாதைகளில் பல ஆண்டுக்கு 15,000க்கும் குறைவான பயணிகளைக் கொண்டுள்ளதுடன், சில சேவைகளின் இலாப விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
இதனால், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளைப் பெறுவதற்கும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும் விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிராந்திய விமான நிலையங்களில் பல நட்டத்தில் இயங்குவதுடன், அவற்றைப் பராமரிப்பதற்கும் மீளமைப்பதற்கும் அதிக செலவுகள் தேவைப்படுவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிராந்திய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்துத் தொடர்புகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் தலையிட்டு, மலிவானதும் நம்பகமானதுமான விமானச் சேவைகளை உறுதிப்படுத்த வேண்டும் என உற்பத்தித்திறன் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
Convert to PDF