மேற்கு சிட்னி பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு சுமார் 7.15 மணியளவில், கேன்லி ஹைட்ஸ் (Canley Heights) பகுதியில் உள்ள டோரன்ஸ் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்துள்ளதாக அவசர தொலைபேசி அழைப்பு மூலம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிஸ் பிரிவினர், தந்திரோபாய நடவடிக்கைப் பிரிவினர் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சுற்றிவளைத்த பொலிஸார், இராணுவத் தரத்திலான துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, வீட்டிலிருந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அவர் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிலிருந்து ஐந்து ஆண்கள் வெளியேற்றப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் குற்றத்தடயப் பகுதியை அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.