ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவதும், சிறுவர்கள் அதிகளவில் சிறையில் அடைக்கப்படுவதும் புதியதொரு ‘காணாமல் ஆக்கப்பட்ட தலைமுறை’ உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஐ.நா.வின் பூர்வக்குடி மக்களின் உரிமைகளுக்கான விசேட அறிக்கையாளர் அல்பேர்ட் கே. பருமே இதனைத் தெரிவித்துள்ளார்.
பூர்வக்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியுள்ள போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பரிந்துரைகள் இல்லாதது பிரச்சினையல்ல; அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறுவதே முக்கியப் பிரச்சினையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அளவுக்கு அதிகமாகச் சிறைகளில் அடைக்கப்படுவதுடன், அவர்களின் குழந்தைகள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பிரிக்கப்படும் சம்பவங்களும் தொடர்வதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
பழங்குடியின சிறுவர்களை குற்றவாளிகளாக நடத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பொருத்தமான கல்வி, பாதுகாப்பு, குடும்ப ஆதரவு மற்றும் சமூகப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குற்றவியல் பொறுப்புக்கான குறைந்தபட்ச வயதை எந்தவித விதிவிலக்குகளுமின்றி 14 வயதாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பூர்வக்குடி மக்களுக்கான பிரதிநிதித்துவ அமைப்பை உருவாக்கும் ‘The Voice’ திட்டம் நிராகரிக்கப்பட்டதை, அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கான அனுமதியாகக் கருதக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பூர்வக்குடி மக்களின் வரலாற்று அநீதிகளை வெளிப்படுத்தும் உண்மையை அறியும் நடவடிக்கைகளையும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒப்பந்தங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“புதியதொரு காணாமல் ஆக்கப்பட்ட தலைமுறை உருவாகும் விளிம்பில் இருப்பதாக அவுஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் உணர்கின்றனர்” என அல்பேர்ட் கே. பருமே எச்சரித்துள்ளார்.
வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படைச் சேவைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கான தனது விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கையை 2027 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.