உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் Microsoft நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்ப முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் மைக்ரோசொப்ட் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆஸ்திரேலியப் பொருளாதாரத்துக்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Outlook, Teams உள்ளிட்ட Microsoft 365 சேவைகள் உலகின் பல நாடுகளில் முடங்கியதால் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 18 மணித்தியாலங்கள் நீடித்த இந்தத் தொழில்நுட்ப முடக்கத்தால் வர்த்தக நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் சிறிய வர்த்தக நிறுவனங்கள் சில மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பணப்பரிமாற்றங்கள், விலைப்பட்டியல் அனுப்புதல் மற்றும் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் மின்னணு மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்த முடியாததால் மீண்டும் காகித ஆவணங்கள் மூலம் மருந்துச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகளவில் சார்ந்திருப்பதன் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய கணினிச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தத் தொழில்நுட்ப முடக்கம் இணையவழித் தாக்குதலாலோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தாலோ ஏற்படவில்லை என மைக்ரோசொஃப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வலையமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்காக மிகவும் வருந்துவதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.