ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயது நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஆரோன் கொலின் நிக்கோல் (Aaron Colin Nicoll) என்ற நபர், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அவர், இன்று முதன்முறையாக ஆர்மடேல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது தனது பெயரை உறுதிப்படுத்தியதைத் தவிர வேறு எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
பேர்த்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள கீஸ்புரூக் (Keysbrook), ஸ்கார்ப் வீதியிலுள்ள (Scarp Road) வீடொன்றுக்குள் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதில் 44 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது உயிரிழந்தவரின் 40 வயதுக்கு மேற்பட்ட பெண் துணையும் அவரது சிறுவயது மகனும் வீட்டுக்குள் இருந்துள்ளனர்.
எனினும், அவர்கள் இருவரும் காயமின்றி வீட்டிலிருந்து தப்பித்து, அருகிலுள்ள அயல் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருமளவிலான ஆயுதம் தாங்கிய பொலிஸார் சம்பவ இடத்தைச் சூழ்ந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஹில்டொப் ஓர்ச்சர்ட் (Hilltop Orchard) பகுதியில் அமைந்துள்ள சொத்தொன்றில் வாகனத்துக்குள் அமர்ந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், குறித்த சொத்திலிருந்து மூன்று துப்பாக்கிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.