விக்டோரியா மாநிலத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட வாக்களிப்பு இன்று (18) ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆட்சி செய்யப்போகும் கட்சியைத் தீர்மானிக்க வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆரம்பகட்ட வாக்களிப்பு நிலையங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தத் தேர்தலில் 46 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 200க்கும் அதிகமான ஆரம்பகட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 150 ஆக இருந்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் தகவலின்படி, ஆரம்பகட்ட வாக்களிப்பு நவம்பர் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க முடியும்.
இதற்கிடையில், தேர்தல் தினமான நவம்பர் 28ஆம் திகதி மாநிலம் முழுவதும் சுமார் 1,700 வாக்களிப்பு நிலையங்கள் செயல்படவுள்ளன.
ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் பிரதான கட்சிகள்
தற்போதைய தொழிற்கட்சி (லேபர்) அரசாங்கம் தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியுள்ளது.
மறுபுறம், ஜெஸ் வில்சன் தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், ஒன் நேஷன் கட்சியும் தேர்தலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற முயற்சித்து வருகிறது. பசுமைக் கட்சியும் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது.
இம்முறை தேர்தலில் முக்கியமான பல தொகுதிகளின் முடிவுகள் மாநில அரசாங்கத்தின் ஆட்சி அமைப்பதில் தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
மேலும், ஆரம்பகட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளும் வெளியாகியுள்ளன. எனினும், வாக்களிப்பு நடவடிக்கைகளில் இடையூறு எதுவும் இல்லை என விக்டோரியா தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது