சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிள்பேர்ன் (Ingleburn) பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட நவ்ரோஸ் அமின் (Nowroz Amin) என்பவருக்கு எதிராக, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஆவணத்தைத் தயாரித்தமை மற்றும் வன்முறைத் தீவிரவாத உள்ளடக்கங்களை வைத்திருப்பதற்காக தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உள்ளடக்கங்கள் மத அடிப்படையிலான தீவிரவாதத்துடன் தொடர்புடையவை என்றும், இஸ்லாமிய அரசு (ISIS) அமைப்பைச் சார்ந்த விடயங்கள் அதில் உள்ளடங்கியிருந்ததாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸின் தேசிய பாதுகாப்பு விசாரணைகளுக்கான பிரதி ஆணையர் ஹில்டா சிரெக் தெரிவிக்கையில், வாகனத்தைப் பயன்படுத்தி வெடிக்கும் சாதனமொன்றை உருவாக்குவது தொடர்பாக குறித்த நபர் ஆய்வு செய்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் தனியாகச் செயற்பட்டதாக நம்பப்படுவதுடன், தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகள் அடையாளம் காணப்பட்டதாகவோ அல்லது தாக்குதலை மேற்கொள்ளும் திறன் அவருக்கு இருந்ததாகவோ தகவல்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமூகத்திற்கு தற்போதைக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனக் குறிப்பிட்ட பொலிஸார், மேலதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை, 15 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த போண்டாய் கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு தினம் நெருங்கும் நிலையில் இடம்பெற்றுள்ளது.
எனினும், கைது செய்யப்பட்ட நபர் வழிபாட்டுத் தலமொன்றை அல்லது குறிப்பிட்ட குழுவை இலக்காகக் கொண்டிருந்ததாக நம்பவில்லை என பிரதி ஆணையர் தெரிவித்தார். அதேவேளை, இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை பொலிஸார் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நவ்ரோஸ் அமின் ஏற்கனவே அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தவர் எனவும், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காம்ப்பெல்டவுன் (Campbelltown) உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் கைது
இந்தச் சோதனை நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக காம்ப்பெல்டவுனில் உள்ள வீடொன்றில் 34 வயதுடைய மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வொல்லி க்ரீக் (Wolli Creek) பகுதியில் 33 வயதுடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.
எனினும், கைது செய்யப்பட்ட ஏனைய இருவருக்கும் 35 வயதுடைய நபர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை என பொலிஸ் பிரதி ஆணையர் ஹில்டா சிரெக் தெரிவித்துள்ளார்.
சோதனை நடவடிக்கைகளின் போது ஆயுதம் ஏந்திய ராப்டர் (Raptor) குற்றக் கும்பல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், வெடிபொருள் கண்டறியும் நாய்கள், தடயவியல் குழுவினர் மற்றும் மீட்பு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.
பல இடங்களில் பொலிஸார் தொடர்ந்து சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.