ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என அரசியல் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும் வெற்றியைப் பெறக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 28ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள சூழலில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பென் கரோல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் ஆகியோர் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்டோரியாவின் முக்கிய பிராந்திய நகரங்களான ஜீலாங் மற்றும் பெண்டிகோ உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் மனநிலை எதிர்க்கட்சிக்கு சாதகமாக மாறி வருவதாகக் கூறப்படுவதுடன், 1992ஆம் ஆண்டு ஜெஃப் கென்னட் தலைமையில் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியைப் போன்றதொரு தேர்தல் முடிவு ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சித் தலைவர் பென் கரோல், தனது நிட்ரி தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வாரா என்பது தொடர்பான கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், அந்தத் தொகுதி எப்போதும் இழுபறி நிறைந்த தொகுதியாகவே இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் தலைமையிலான ஆட்சி அமைந்தால் சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் செலவுகள் குறைக்கப்படும், மழலையர் கல்விக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என பென் கரோல் குற்றஞ்சாட்டினார்.
1975ஆம் ஆண்டு மெடிகேர் திட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதல் மாநிலத்தில் பல் மருத்துவப் பராமரிப்பு உரிய கவனத்தைப் பெறவில்லை எனவும், வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே தனது போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால், 36 வயதான ஜெஸ் வில்சன் விக்டோரியா மாநிலத்தின் முதலாவது பெண் முதலமைச்சராகவும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் இளவயதில் முதலமைச்சர் பதவியேற்கும் தலைவராகவும் வரலாறு படைப்பார்.
“இன்னும் ஒரு வாரத்தில் விக்டோரிய மக்கள் மாநிலத்தின் அரசியல் திசையை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறவுள்ளனர். இந்தத் தேர்தல் மிகவும் நெருக்கமானதாக அமையும். ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானதாக இருக்கும்” என ஜெஸ் வில்சன் தெரிவித்துள்ளார்.
ஒன் நேஷன் கட்சியின் மாநிலத் தலைவர் வாரன் பிக்கரிங் மற்றும் விக்டோரிய பசுமைக் கட்சித் தலைவர் எலன் சாண்டல் ஆகியோரும் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு தேர்தலை விட இம்முறை சிறு கட்சிகள் அதிக ஆதரவைப் பெறக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பசுமைக் கட்சிக்கு தற்போது அதிகரித்த ஆதரவு கிடைத்து வருவதாகவும், தலைவர்கள் விவாதத்திலும் கட்சி சிறப்பாகச் செயல்பட்டதாகவும் எலன் சாண்டல் தெரிவித்துள்ளார்.
தலைவர்களை மையப்படுத்திய தேர்தல் பிரசாரம்
இந்தத் தேர்தல் பிரசாரம் தலைவர்களை மையப்படுத்திய, ஜனாதிபதி தேர்தல் பாணியில் நடைபெற்று வருவதாக மொனாஷ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் ஸரேஹ் கஸாரியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 52 வாரங்களில் விக்டோரிய அரசியலில் தொழிலாளர் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டணியின் விளம்பரங்களில் ‘ஜெஸ் வில்சனின் லிபரல்கள்’ என தலைவரின் பெயர் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், தொழிலாளர் கட்சியும் பென் கரோலை மையப்படுத்திய பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
2026 தேர்தலில் தொழிலாளர் கட்சி, 2010ஆம் ஆண்டு ஜான் பிரம்பி தலைமையில் ஏற்பட்ட தோல்வியையும், 1992ஆம் ஆண்டு ஜோன் கிர்னர் தலைமையில் ஜெஃப் கென்னட் பெற்ற மாபெரும் வெற்றியையும் ஒத்த பின்னடைவைச் சந்திக்கக்கூடும் என டீக்கின் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் ஜெஃப் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெல்பேர்னின் புறநகரப் பகுதிகளில் வாக்காளர் ஆதரவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜெஸ் வில்சன் ஏற்றதன் பின்னர் சுயேச்சைக் குழுக்களின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மெல்பேர்னின் உள் வடக்கு பகுதிகளில் பசுமைக் கட்சி தனது ஆதரவை விரிவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிராந்திய நகரங்களிலும் தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடி
ஜீலாங், பலராட் மற்றும் பெண்டிகோ ஆகிய விக்டோரியாவின் முக்கிய பிராந்திய நகரங்களில் தொழிலாளர் கட்சி பெரும் சவாலை எதிர்கொள்வதாகவும், 1990களுக்குப் பின்னர் முதல் முறையாக இந்நகரங்களில் லிபரல் கட்சி பல தொகுதிகளைக் கைப்பற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர் ஜெஃப் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்களான ஸ்டீவ் பிராக்ஸ் மற்றும் ஜான் பிரம்பி காலங்களில் இந்த நகரங்கள் தொழிலாளர் கட்சியின் வலுவான ஆதரவுத் தளங்களாக இருந்தன. ஆனால், இம்முறை தேர்தலில் அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெசிந்தா அலன் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்டிகோ தொகுதி உட்பட, முக்கிய பிராந்திய தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
விக்டோரியா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, அல்லது தொழிலாளர் கட்சி தனது ஆட்சியைத் தக்கவைக்குமா என்பதை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கவுள்ளன.