COP31 காலநிலை மாநாட்டில் எரிபொருள் விவகாரம் தொடர்பான சர்ச்சையால் இறுதி உடன்பாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து,ஆஸ்திரேலிய காலநிலை மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவென் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
துருக்கியுடன் இணைந்து மாநாட்டை நடத்துவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 200 நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு கிறிஸ் போவென் தலைமை வகித்தார். எனினும், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க முடியாத நிலையில், தம்மால் எட்ட முடியாத சில உறுதியான நிலைப்பாடுகள் இருப்பதாகக் கூறி அவர் முயற்சியைக் கைவிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு திட்டமிட்ட நிறைவுத் திகதியை விட இரண்டு நாட்கள் தாமதமாக, குழப்பமான சூழலில் முடிவடைந்தது. இறுதி உடன்பாடு நிராகரிக்கப்பட்டமை, சர்வதேச இராஜதந்திர உறவுகளில் நிலவும் பிளவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியின் எரிசக்தி விவகாரப் பேச்சாளர் டான் டெஹான், கிறிஸ் போவென் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
“கிறிஸ் போவென் இன்று பதவி விலக வேண்டும்.ஆஸ்திரேலிய வரி செலுத்துவோரின் 150 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், ஆணுறுப்பு தொடர்பாக நகைச்சுவை பேசி சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவை அவமானப்படுத்தியுள்ளார். வரி செலுத்துவோரின் பணத்தைச் செலவிடுவதில் மட்டும் அவர் தோல்வியடையவில்லை” என டெஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநாட்டின் போது தொலைபேசி கதிர்வீச்சு மற்றும் ஆணுறுப்பு தொடர்பாக கிறிஸ் போவென், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் நகைச்சுவையாகப் பேசிய சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் அந்தோனி அல்பானீஸ் இதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
மாநாட்டை நடத்துவதற்கான ஆஸ்திரேலியாவின் முயற்சியை ஆரம்பம் முதலே எதிர்த்த எதிர்க்கட்சி, அதற்கான செலவுகளையும் கடுமையாக விமர்சித்து வந்தது.
சுற்றுச்சூழல் அமைப்புகளும் கடும் அதிருப்தி
காலநிலை தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படாததால் அவுஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளன. சில அமைப்புகள் இந்தத் தோல்விக்கு கிறிஸ் போவென் மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறியுள்ளன.
காலநிலை நடவடிக்கை வலையமைப்பு ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டெனிஸ் கௌச்சி தெரிவிக்கையில்,
“காலநிலை நிதி தொடர்பான முன்னேற்றங்களை செல்வந்த நாடுகள் தடுத்ததால், பேச்சுவார்த்தைகளில் உடன்பாட்டை ஏற்படுத்த அவுஸ்திரேலியா தவறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாற்றம் மற்றும் கடந்த ஆண்டு இணக்கம் காணப்பட்ட நியாயமான மாற்றம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சுமார் 700 பரப்புரையாளர்களின் அழுத்தத்திற்கு அவுஸ்திரேலியாவும் துருக்கியும் அடிபணிந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பசுமைக் கட்சித் தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் பான்ட்டும் இந்த உடன்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காலநிலை நெருக்கடிக்கு முக்கிய காரணமான நிலக்கரி மற்றும் எரிவாயு குறித்து குறிப்பிடப்படாத உடன்பாட்டை நாடுகள் நிராகரித்தது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், நிலக்கரி மற்றும் எரிவாயுவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்திய போதிலும், அவுஸ்திரேலிய பிரதமர் தனது உரையில் அவற்றைக் குறிப்பிடத் தவறியமை மாநாட்டின் ஆரம்பத்திலேயே தவறான சமிக்ஞையை ஏற்படுத்தியதாகவும் பான்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உடன்பாடு எட்டப்படாததால் ஐ.ந. கவலை
காலநிலை மாநாட்டில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
“காலநிலை நெருக்கடி கோரும் தருணத்தில் அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்த்த அனைவரின் ஏமாற்றத்தையும் நான் பகிர்ந்துகொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி உடன்பாட்டை எட்ட முடியாதது ஏமாற்றமளிப்பதாக கிறிஸ் போவென் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மாநாடு முடிவடைய வேண்டிய நேரத்தைத் தாண்டி 49 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், துருக்கியின் சுற்றுச்சூழல் அமைச்சர் முராத் குரும் இறுதியாக மாநாட்டை நிறைவு செய்தார்.
சிக்கலான புவிசார் அரசியல் சூழல்
மாநாட்டின் பின்னணியில், உலகின் மிகச் சிக்கலான புவிசார் அரசியல் சூழல் நிலவுவதாக கிறிஸ் போவென் குறிப்பிட்டுள்ளார். அதிகரித்த எரிசக்தி விலைகள் மற்றும் மத்திய கிழக்கு போர் ஏற்படுத்திய தாக்கங்கள் நாடுகளுக்கிடையிலான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தடையாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலநிலை தொடர்பான பேரிடர்கள் ஐரோப்பா முதல் நேபாளம் வரை பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு போவென் முயற்சித்தார்.
ஆனால், நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சவூி அரேபியாவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. எண்ணெய் உற்பத்தி நாடுகள் இறுதி உடன்பாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான எந்தக் குறிப்பையும் சேர்க்க எதிர்த்ததால் பேச்சுவார்த்தைகள் முடங்கின.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்தின் காலநிலை அமைச்சர் டாராக் ஓ பிரையன்,
“புதைபடிவ எரிபொருட்கள் குறித்து குறிப்பிடப்படாத எந்தவொரு இறுதி உடன்பாட்டையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் அதுவே. புதைபடிவ எரிபொருட்களை மறைமுகமாக நியாயப்படுத்தும் மாநாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
பனாமா, வனுவாட்டு மற்றும் மார்ஷல் தீவுகளும் இறுதி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் COP31 மாநாடு வரலாற்றிலேயே மிக நீண்ட காலநிலை மாநாடாக அமைந்தது.
மீண்டும் இத்தகைய தோல்வி ஏற்படக்கூடாது
2009ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற தோல்வியடைந்த காலநிலை மாநாட்டின் நினைவுகளை இந்த முடிவு மீண்டும் ஏற்படுத்தியுள்ளதுடன், காலநிலை தொடர்பான சர்வதேச இராஜதந்திர முயற்சிகளின் செயல்திறன் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
“இன்றைய முன்னேற்றம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை” என ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.
“உலகம் மீண்டும் இத்தகைய தோல்வியைச் சந்திக்க முடியாது” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.