அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகரித்து வரும் போட்டி உலகளாவிய ஸ்திரத்தன்மையை பாதித்து, மோதல் அபாயத்தை அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் எச்சரிக்கவுள்ளார்.
சர்வதேச விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் புறக்கணித்து வல்லரசுகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் உலக ஒழுங்கு பலவீனமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டவுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை செனட் சபையில் நடைபெறவுள்ள முக்கிய வெளிநாட்டுக் கொள்கை உரையில் பென்னி வோங் இந்த எச்சரிக்கையை விடுக்கவுள்ளார்.
அமெரிக்காவும் சீனாவும் உலகின் பல்வேறு துறைகளில் ஆதிக்கத்துக்காகப் போட்டியிட்டு வருகின்றன. இந்தப் போட்டி மோதலாக மாறுவதைத் தடுக்க முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது பலவீனமடைந்து வருவதாக அவர் குறிப்பிடவுள்ளார்.
சீனா தனது நலன்களுக்கு ஏற்ப பலதரப்பு சர்வதேச அமைப்புகளை மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும், சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இராணுவமயமாக்கலை அதிகரித்து வருவதாகவும் பென்னி வோங் சுட்டிக்காட்டவுள்ளார். அதேவேளை, அமெரிக்காவின் உலகளாவிய பங்களிப்பு மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புகள் தொடர்பான கொள்கைகளும் மாற்றமடைந்து வருவதாக அவர் கூறவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டியே தற்போதைய காலத்தின் முக்கிய மூலோபாயப் போக்காக உள்ளதாகக் குறிப்பிடும் அவர், இத்தகைய சூழலில் அவுஸ்திரேலியா தனது இறையாண்மை, தேசிய நலன்கள் மற்றும் சர்வதேச செல்வாக்கைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தவுள்ளார்.
அதற்காக இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக வல்லரசுகளின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தவுள்ளார்.
நடுத்தர வல்லரசுகளின் கூட்டுப் பலத்தை வலுப்படுத்த வேண்டும்
அமெரிக்கா மற்றும் சீனா உலகின் பிரதான வல்லரசுகளாகத் தொடர்ந்தாலும், அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியாக அதிக செல்வாக்கைப் பெற்று வருகின்றன என பென்னி வோங் சுட்டிக்காட்டவுள்ளார்.
இத்தகைய நாடுகள் தனித்தனியாகச் செயற்படுவதை விட ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் அதிக வலிமையையும் செல்வாக்கையும் பெற முடியும் எனவும் அவர் வலியுறுத்தவுள்ளார்.
பிராந்திய நாடுகளுடனும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்துவதுடன், ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பையும் அவுஸ்திரேலியா விரிவுபடுத்தி வருவதாக அவர் தெரிவிக்கவுள்ளார்.
சர்வதேச அமைப்புகளை கைவிடக்கூடாது
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நிதி நெருக்கடிகள் மற்றும் வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகளால் முடக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் பென்னி வோங், அவற்றைக் கைவிடுவதற்குப் பதிலாக சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.
பலதரப்பு சர்வதேச ஒத்துழைப்பு பலவீனமடைவதால் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மேலும் கடினமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டவுள்ளார்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தும் அவர், குறைபாடுகள் இருப்பதற்காக சர்வதேச ஒத்துழைப்பு முறையை கைவிடுவது சிறிய மற்றும் நடுத்தர நாடுகளின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கவுள்ளார்.